ஊடுருவலை மம்தா பானர்ஜி ஆதரிக்கிறார்: பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் திரிணமூல் காங்கிரஸின் தியாகிகள் தினம் பேரணி நடைபெற்றது. இதன்பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். அவர் கூறும்போது, “அண்டை நாடான வங்கதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற மக்கள் மேற்குவங்கத்தை அணுகினால் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்போம்’’ என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் நேற்று கூறியதாவது: வெளிநாடுகளை சேர்ந்தவர் களுக்கு ஒரு மாநில அரசால் அடைக்கலம் அளிக்க முடியாது. இந்த விவகாரம் மத்திய அரசின்வரம்புக்கு உட்பட்டது. வங்கதேசகலவரத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு மேற்குவங்கத்தின் கதவு எப்போதும் திறந்திருக்கும் என்று மம்தா கூறியுள்ளார். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி இந்துக்கள், சீக்கியர்கள், பார்சி,கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க அவர் எதிர்ப்புதெரிவிக்கிறார். மத்திய அரசின் அதிகார வரம்புகளை மீறும் வகையில் மாநில அரசுகள் செயல்படக் கூடாது.

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவதை முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரிக்கிறார். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளில் மேற்குவங்கமும் ஒன்றாகும். இந்துக்களுக்கான நிலத்தை காப்பாற்ற மேற்குவங்க மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். இதை உணராமல் முதல்வர் மம்தா பானர்ஜி பேசி வருகிறார்.

கேரளாவில் ஆட்சி நடத்தும் மார்க்சிஸ்ட் அரசு, புதிதாக வெளியுறவு செயலாளரை நியமித்து உள்ளது. இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மார்க்சிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஜாதி, மதம், மொழியின் பெயர்களில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன.

இவ்வாறு ஷெசாத் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE