ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ஈடுபடுவோம்; எதிர்ப்பு அரசியல் செய்ய வேண்டாம்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்மறை அரசியலை கைவிட வேண்டும். ஜனநாயக மரபுகளை காக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது:

2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க உறுதி பூண்டுள்ளோம். அதற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

கடந்த மக்களவை தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. தேர்தல் களத்தில் தேசிய, மாநில கட்சிகள் தங்கள் பலத்தை நிரூபித்தன. தேர்தல் காலம் முடிந்து விட்டது. அடுத்த 5 ஆண்டுகள் நாட்டுக்காக பாடுபட வேண்டும்.

இந்த நேரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் ஓர் அழைப்பு விடுக்கிறேன். கருத்து வேறுபாடுகளை மறந்து அடுத்த நான்கரை ஆண்டுகள் நாட்டுக்காக ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும்.

வரும் 2029-ம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் தேர்தல் காலம் வரும். அப்போது மீண்டும் தேர்தல்களத்தில் விளையாடலாம். அதுவரை நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து அனைத்து எம்.பி.க்களும் பணியாற்ற வேண்டும்.

இப்போதைய நிலையில் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்களின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்துவருகிறது. அவர்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்மறை அரசியலை கைவிட வேண்டும். ஜனநாயக மரபுகளை காக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ச்சியாக 3-வது முறை ஆட்சி அமைத்த பெருமையை பெற்றிருக்கிறோம்.

‘என் குரலை ஒடுக்க முயற்சி’ - எனினும், கடந்த கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் குரலை ஒடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து சுமார் இரண்டரை மணி நேரம் பேசினேன். அப்போது எனது குரலை ஒடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

நாடாளுமன்றம் என்பதுஎம்.பி.க்களின் அரங்கம் மட்டுமல்ல, 140 கோடி மக்களின் அரங்கம்.இது ஜனநாயகத்தின் கோயில். இந்த கோயிலில் எதிர்மறை அரசியலை கைவிட்டு, வளர்ச்சி அரசியலை ஆதரிக்க வேண்டுகிறேன். நாடாளுமன்ற நடவடிக்கைகளை மக்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இவ்வாறு பிரதமர் கூறினார்.

காங்கிரஸ் பதில்: பிரதமரின் குற்றச்சாட்டு குறித்துகாங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியதாவது:

பிரதமரின் குரலை ஒடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்யவில்லை. மக்களின் பிரச்சினைகளைதான் நாடாளுமன்றத்தில் எழுப்புகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டு மக்களின் குரலை பாஜக அரசு ஒடுக்கியது. இதன் காரணமாகவே தேர்தலில் அந்தகட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். தற்போது 2 கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் நீடிக்கிறது.

நாடாளுமன்றத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள்,பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின,பழங்குடியினருக்காக தொடர்ந்துகுரல் எழுப்புவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE