விவசாயிக்கு துப்பாக்கியால் மிரட்டல்: பூஜா கேத்கரின் தாயாருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

By செய்திப்பிரிவு

புனே: யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்றவர் பூஜா கேத்கர், மகாராஷ்டிராவின் புனே உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அதிகார துஷ்பிரயோகம் குறித்தபுகாரின் பேரில் வாசிம் மாவட்டத்துக்கு அவர் மாற்றப்பட்டார்.

இதையடுத்து ஓபிசி இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியது, பார்வைத் திறன் குறைபாடு மற்றும் மூளைத்திறன் குறைபாடு இருப்பதாக பொய்யான தகவலை அளித்ததாக பூஜா மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை விசாரணை நடத்தி வந்தது. இதனிடையே அவருடைய உதவி ஆட்சியர் பயிற்சி திட்டத்தை நிறுத்திவைக்க தேசியநிர்வாக கழகம் முடிவு செய்து அறிவித்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பூஜா கேத்கரின் தாயார் மனோரமா கேத்கர், விவசாயியை நோக்கி துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக புகார் எழுந்தது. நிலத்தகராறில் விவசாயியை நோக்கி அவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்த ராய்காட் மாவட்ட போலீஸார், அண்மையில் அவரைக் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE