அறுவடை செய்ய மறுத்த தலித் பிரிவினரின் மீசையை மழித்து, சிறுநீர் குடிக்க வைத்த கொடுமை

By உமர் ரஷித்

உத்தரப் பிரதேச மாநிலத்தில், உயர் சாதி வகுப்பினரின் வயலில் அறுவடை செய்ய மறுத்த தலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் மீசையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி, அவரை சிறுநீர் குடிக்க வைத்த கொடுமை நடந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் 4 பேரை கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் பதுன் மாவட்டம், ஆசம்பூர் பிசாலுயா கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம் வால்மீகி. இவர் தலித் பிரிவைச் சேர்ந்தவர். இந்நிலையில், கடந்த 24-ம் தேதி வால்மீகி வேறு ஒருவரின் நிலத்தில் கோதுமை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த ஆசம்பூர் விசாருயா கிராமத்தைச் சேர்ந்த விஜய் சிங், சைலேந்திர சிங், விக்ரம் சிங், பிங்கு சிங் ஆகியோர் தங்கள் நிலத்தில் கோதுமையை அறுவடை செய்ய வருமாறு வால்மீகியிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், மாட்டுத்தீவனம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால்,அதற்கு அவர்கள் மறுக்கவே தன்னால் வர இயலாது என்று வால்மீகி தெரிவித்துவிட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த 4 பேரும், வால்மீகியைத் தாக்கி, அவரின் மீசையை வலுக்கட்டாயமாக கையால் பிடுங்கி உள்ளனர், அதுமட்டுமல்லாமல், அவர்களின் ஷூவில் சிறுநீர் கழித்து அதை வால்மீகியின் வாயில் ஊற்றிக் குடிக்கவைத்து கொடுமை செய்துள்ளனர்.

இதனால் மன உளைச்சல் அடைந்த வால்மீகி ஹஸ்ரத்பூர் போலீஸ் நிலையத்தில் அந்த 4 பேர் மீதும் புகார் செய்தார். ஆனால், அந்தப் புகாரை வாங்காமல் போலீஸ் நிலைய அதிகாரி அலைக்கழித்தார்.

இதன்பின் வால்மீகியின் மனைவி போலீஸ் எஸ்.பிஅசோக் குமாரிடம் புகார் தெரிவித்தபின், அவர் உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், ரேபரேலி சரக போலீஸ் ஐஜி துருவ் காந்த் தாக்கூர் பாதிக்கப்பட்ட வால்மீகி ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இது குறித்து வால்மீகி நிருபர்களிடம் கூறுகையில், ''ஆசம்பூர் விசாருயா கிராமத்தைச் சேர்ந்தவர்களின் நிலத்தில் அறுவடை செய்ய முடியாது என நான் தெரிவித்தவுடன் என்னை அந்த 4 பேரும் அடித்து உதைத்தனர். கிராமம் முழுவதும் தரதரவென இழுத்துச் சென்று மரத்தில் கட்டிவைத்து அடித்து அவமானப்படுத்தினார்கள். என் மீசையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி, அவர்களின் ஷூக்களில் சிறுநீர் பிடித்து என்னை குடிக்கவைத்தனர்'' என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

எஸ்சிஎஸ்டி வன்கொடுமைச்சட்டத்தின் கீழும், ஐபிசி பிரிவு 308, 342, 332, 504, 506 ஆகிய பிரிவுகளின் கீழும் ஹஸ்தர்பூர் போலீஸ் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். வால்மீகியின் புகாரைப் பெறாமல் அலைக்கழிப்பு செய்த நிலைய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஆசம்பூர் விசாருயா கிராமத்தைச் சேர்ந்த விஜய் சிங், சைலேந்திர சிங், விக்ரம் சிங், பிங்கு சிங் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்