“மக்களின் உயிரோடு விளையாடும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்” - மாநிலங்களவையில் கனிமொழி சோமு ஆவேசம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “விதிகளுக்குப் புறம்பாக புதிய மருந்து சோதனைகளைச் செய்தும், முழுமையான சோதனைகளைச் செய்யாமலும் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து மக்களின் உயிரோடு விளையாடும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக இன்று (ஜூலை 22) மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தின்போது திமுக எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு பேசியது: "தேசிய நோய்க் கிருமிகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓர் அங்கமான நெறிமுறைகளை வகுத்துக் கண்காணிக்கும் குழு, இந்திய மக்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ள மிக முக்கியமான பிரச்னை ஒன்றை எழுப்பியிருப்பது பற்றி இந்த அவையின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

நோய்களை குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, அதை முழு அளவில் உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டுவரும் முன்பாக நடத்தப்படும் பரிசோதனைகளில் நடைபெறும் மிகப்பெறும் மோசடி மற்றும் விதி மீறல்கள் பற்றி அந்தக் குழுவினர் கவலை தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக மார்பகப் புற்றுநோய்க்கான மருந்தை கண்டுபிடித்து, அந்த மருந்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை மனிதர்களிடத்தில் சோதித்துப்பார்க்கும் முக்கியமான விஷயத்தில் ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனம் மிக அலட்சியமாக நடந்துகொண்டதை விசாரிக்கும்படி இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குனருக்கு புகார் வந்துள்ளதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆயிரம் பேரிடம் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று விதி இருக்கும்போது சில நூறு பேரிடம் கூட சோதனைகள் நடப்பதில்லை என்று தகவல்கள் வருகின்றன.

எந்த ஒரு மருந்தையும் உற்பத்திக்கு முன்பாக சோதனை செய்யும்போது முதலில் தேசிய அளவில் உள்ள சோதனைப் பதிவேட்டு அமைப்பில் பதிவுசெய்ய வேண்டும். இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தின் நம்பகத்தன்மை மற்றும் அதன் அறிவியல்பூர்வமான சோதனை முடிவுகள்தான். இவைதான் அந்த மருந்தின் தரம் பற்றிய உச்சபட்ச தரக்குறியீடு. இதில் ஏதேனும் ஒரு இடத்தில் சிறு தவறு நடந்தால் கூட அது கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடும் ஆபத்து இருக்கிறது.

கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருந்தை தருவித்து ஆரம்பகட்ட பரிசோதனைகள் முடிந்த பிறகே மனிதர்களிடத்தில் அதை சோதித்துப் பார்க்க வேண்டும் என்பது விதி. ஆனால் சமீபத்தில் ஒரு மருந்து நிறுவனம், கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருந்து தங்கள் கைகளுக்கு கிடைத்த நான்கு மாதங்களுக்குள்ளாக இவர்களாகவே மனிதர்களிடத்தில் சோதனை நடத்தி சான்று பெற்றிருக்கிறார்கள். இது எப்படி சரியாகும்? அது உண்மையிலேயே நோயை குணப்படுத்தும் மருந்துதானா என்று சந்தேகம் எழுகிறது.

இன்னொரு நிறுவனம் தயாரித்துக்கொண்டிருந்த மருந்தை சோதனை செய்த அதிகாரிகள், அவற்றை இந்தியாவில் விற்பனை செய்யக் கூடாது என்று தடை விதித்தார்கள். அவற்றை கென்யா நாட்டிற்காக தயாரிப்பதாகச் சொல்லிவிட்டு மிகப்பெரிய அளவில் தயாரான அந்த மருந்தை சட்டவிரோதமாக இந்தியாவில் தொடர்ந்து விற்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. பெரிய மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் இயங்கக்கூடிய நெறிமுறைக் குழுக்கள் செயலற்றுப் போய்விட்டதாகவும்; பெயரளவுக்கே அவை இருப்பதாகவும் மருத்துவமனைகளுக்கான தரக் கட்டுப்பாட்டு வாரியமும், இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த நிலை தொடர்ந்தால், பரிசோதனை முடிவுகள் பற்றிய ஆய்வுகள் அத்தனையும் தவறானதாகவே கிடைக்கும். அது மனிதர்களின் ஆரோக்கியத்தில் கேட்டை விளைவித்து உயிரைப் பறிப்பதில் போய் முடியும் ஆபத்து இருக்கிறது. இதில் இன்னொரு வேதனையான விஷயம் என்னவென்றால், மருந்து தயாரிப்பு விஷயங்களில் விதிகளை முறையாகப் பின்பற்றாத 35 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சுமார் 1000 கோடி ரூபாய்க்கு தேர்தல் நிதிப் பத்திரங்களை வாங்கி, மத்தியிலும், மாநிலங்களிலும் உள்ள செல்வாக்கான அரசியல் கட்சிகளுக்கு வழங்கியிருப்பதை தேர்தல் ஆணைய ஆவணங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இவற்றில் ஏழு நிறுவனங்கள் மீது தரம் குறைவான மருந்துகளை கையாள்வதாக விசாரணை நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தேர்தல் நிதி அளித்தால் தாங்கள் செய்யும் தவறுகளில் இருந்து மத்திய அரசு தங்களைக் காப்பாற்றும் என்று இவர்கள் நினைத்தால், அதைப் பொய்யாக்கும் வகையில் தவறு செய்யும் மருந்து நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்; தவறான, முழுமையற்ற மருந்து சோதனைகளை நடத்தி சில மருந்து நிறுவனங்கள் மக்களின் உயிரோடு விளையாடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமல்ல, ஒரு மருத்துவராகவும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்