புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில், பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நாளை தொடர்ந்து 7-வது முறையாக மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்ய உள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். புதிய அரசில் நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதி அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. தேர்தலுக்கு பிறகு புதிய அரசு அமைந்துள்ளதால் இந்த கூட்டத் தொடரில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில்,பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். கடந்த 2023-24 நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார செயல்பாடு, பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை, துறைகளின் வளர்ச்சிப் போக்கு எப்படி இருந்தது, வரும் ஆண்டில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்ன என்பது உள்ளிட்ட விவரங்கள் இந்த ஆய்வறிக்கையில் இடம்பெறும். தலைமை பொருளாதார ஆலோசகரின் வழிகாட்டுதலுடன் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
காகிதமில்லா பட்ஜெட்: மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக மத்திய பட்ஜெட்தாக்கல் செய்தவர் என்ற புதிய சாதனை படைத்து, மொரார்ஜிதேசாயின் சாதனையை முறியடிக்க உள்ளார். 1959 முதல் 1964 வரை மத்திய நிதி அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் 5 முழு பட்ஜெட், ஒரு இடைக்கால பட்ஜெட் என தொடர்ந்து 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய ஆண்டுகள் போல, இந்த முறையும் காகிதமில்லா முறையில் டிஜிட்டல் வடிவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
‘மத்திய பட்ஜெட் செல்போன் செயலி’யில் பட்ஜெட் உரை இடம்பெறும். இது ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் இருக்கும். மத்திய பட்ஜெட் இணையதளத்தில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்றதால், வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளான பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலுக்கு பிறகு புதிய அரசு அமைந்துள்ளதால் முழு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்ஜெட் தயாரிப்பின் ஒரு பகுதியாக, பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். குறிப்பாக, வர்த்தக சங்கங்கள், கல்வி, சுகாதாரத் துறையினர், வேலைவாய்ப்பு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகள், சேவை, தொழில் துறையினர், பொருளாதார வல்லுநர்களை சந்தித்து அவர்களது ஆலோசனைகளை கேட்டறிந்தார். மூலதன செலவை அதிகரிக்க வேண்டும், நிதி பற்றாக்குறையை குறைக்க வேண்டும், வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று இந்த ஆலோசனையின்போது பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டில் பல்வேறு வரி சீர்திருத்தங்கள் செய்யப்படும், தொழில் துறையை ஊக்குவிக்கும் அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பட்ஜெட் மீதான விவாதம் 24-ம் தேதி முதல் நடைபெறும். மேலும் இந்த கூட்டத் தொடரில் 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் விமான சட்ட மசோதா, ஜம்மு - காஷ்மீர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறும் மசோதா ஆகியவை முக்கியமானவை. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago