‘‘விமான போக்குவரத்து சீராக நடந்து வருகிறது’’ - மைக்ரோசாப்ட் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “விமான சேவை வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. தற்போது விமானப் போக்குவரத்து சீராக நடந்து வருகிறது” என்று மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிகாலை 3 மணி முதல், விமான நிலையங்களில் விமான சேவை வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. தற்போது விமானப் போக்குவரத்து சீராக நடந்து வருகிறது. நேற்று ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக பின்னடைவுகள் உள்ளன. அவை படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருகின்றன. இன்று (ஜூலை 20) நண்பகலுக்குள் அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.

பயணத்திட்ட மாற்றம் மற்றும் பணத்தை திருப்பியளித்தல் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் விமான சேவை நிறுவனங்கள் மற்றும் எங்களுடைய விமான நிலையங்களின் செயல்பாடுகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை: அமெரிக்காவை சேர்ந்த ‘கிரவுட்ஸ்டிரைக்’ என்ற நிறுவனம், பல்வேறு முன்னணி மென்பொருள் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட், கூகுள் உட்பட 23,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளராக உள்ளன.

‘கிரவுட்ஸ்டிரைக்’ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வப்போது தனது ‘பால்கன் சென்சார்’ மென்பொருளை மேம்படுத்துவது வழக்கம். அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பை உறுதிசெய்ய ‘கிரவுட்ஸ்டிரைக்கின்’ ‘பால்கன் சென்சார்’ மென்பொருள் அப்டேட் செய்யப்பட்டது. இதில் எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, மைக்ரோசாப்டின் சர்வர் நேற்று திடீரென முடங்கியது.

இதனால், உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் அஸூர், ஆபீஸ் 365 சேவைகளை பயன்படுத்தும் நிறுவனங்களின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கின. பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள், தனிநபர்கள் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் மென்பொருளில் இயங்கும் கணினி, மடிக்கணினிகளில் நீல திரை தோன்றி, ‘கணினி செயலிழந்துள்ளது’ என்பதை காட்டியது.

விமான சேவை பாதிப்பு: மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, தைவான், ஐக்கிய அரபு அமீரகம், தென்கொரியா, அயர்லாந்து, துருக்கி, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அமெரிக்காவின் யூனைடெட் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் விமான சேவைகளை முற்றிலுமாக நிறுத்தின.

அமெரிக்காவில் 512, ஜெர்மனியில் 92, கனடாவில் 21, இத்தாலியில்45 என உலகம் முழுவதும் நேற்று 1,400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 3,000-க்கும்மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE