உ.பி காவடி யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள கடைகளில் வியாபாரிகளின் பெயர்களை எழுதி வைக்க உத்தரவு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: வட மாநிலங்களில் மிகவும் புனிதமாகக் கருதப்படுவது கன்வர் யாத்ரா எனும் காவடிகள் யாத்திரை. இது இந்த வருடம் ஜுலை 22-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 6-ம் தேதி முடிவடைகிறது. இந்த யாத்திரையானது, ஒவ்வொரு முறையும் உ.பி. அரசுக்கு பெரும் சவாலாகி விடுகிறது. இந்த யாத்திரையினருடன் மோதலால் மதக்கலவரம், சாலை விபத்து உள்ளிட்ட பலவகை பிரச்சினைகள் எழுவது உண்டு.

இந்தமுறை காவடி யாத்திரையின் போது உ.பி.யில் 10 சட்டப்பேரவைக்கானத் தொகுதிகளின் இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதையும் மனதில் வைத்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் வெளியிட்ட உத்தரவு சர்ச்சையாகி வருகிறது.

தனது உத்தரவில் முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘காவடி யாத்திரை போகும் வழியிலுள்ள கடை வியாபாரிகள் அனைவரும் தமது பெயர்களை கடைகளின் வெளியில் தெரியும்படி எழுதி ஒட்டி வைக்க வேண்டும். இது,காவடிகளின் புனிதத்தை காக்கஉதவும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.உ.பி.யை ஒட்டியுள்ள உத்தராகண்டின் சிவத்தலமான ஹரித்துவாரில் இந்த யாத்திரை அதன் மேற்குப் பகுதியில் அதிமுக்கியத்துவம் பெருகிறது.

யாத்திரையின் வழியில் 2013-ல் சமாஜ்வாதி ஆட்சியின்போது மதக்கலவரத்தில் சிக்கிய முசாபர்நகர் மாவட்டமும் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த காவல் துறையினர் முதல் மாவட்டமாக முதல்வரின் உத்தரவை அமலாக்கினர். இதையேற்று முசாபர்நகர் மாவட்டத்தில் கடை, ஓட்டல், தள்ளுவண்டி உள்ளிட்ட அனைத்து வியாபாரிகளும் தமது பெயர்களை பெரிதாக எழுதி ஒட்டி வைக்கத் துவங்கினர்.

இந்தச் சூழலில், இந்து மற்றும் முஸ்லிம் வேறுபாடு அரசியல் இருப்பதாக உ.பி. எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்கள் செய்துள்ளன.

இது குறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, இதுபோன்ற உத்தரவு ஒரு சமூகக் குற்றமாகும். இதன்மூலம், உ.பி.யின் அமைதியான மதநல்லிணக்கச் சூழல் குலையும். இப்பிரச்சினையில் நீதிமன்றம் தானாக முன்வந்து தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எதிர்ப்பு: மற்றொரு எதிர்க்கட்சியான காங்கிரஸின் ஊடகப் பிரிவின் தலைவரான பவன் கேரா, இதுபோன்ற உத்தரவு நமது கலாச்சாரத்திற்கு எதிரானது. முஸ்லிம்களை பொருளாதார ரீதியில் புறக்கணிக்கும் முயற்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.

உபியின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, மதநல்லிணக்கத்தை குலைக்கும் உத்தரவு இது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐஜத கண்டனம்: பிஹாரில் பாஜக ஆதரவுடன் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளரான கே.சி.தியாகி, ‘மதமோதலுக்கு வித்திடும் இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இதேபோன்று யாத்திரை நடைபெறும் பிஹார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற உத்தரவை இதுவரை பிறப்பித்ததில்லை’ எனத் தெரிவித்துள்ளார். உ.பி.யின் உத்தரவுக்கு பாஜகவின் கூட்டணியான ராஷ்டிரிய லோக் தளமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இக்கட்சியின் உ.பி. மாநிலத் தலைவரான ராமாஷிஷ் ராய், சாதி, மத வேறுபாடுகளை உருவாக்கும் இந்த சட்டவிரோதமான இந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில் சர்ச்சை உத்தரவுக்கு உ.பி.யின் சில முஸ்லிம்கள் ஆதரவளித்துள்ளனர். சஹரான்பூர் காவல்துறையினரின் உத்தரவின் மீது அரசியல் செய்வது சரியல்ல என அகில இந்திய முஸ்லிம் ஜமாத் அமைப்பின் தலைவரான மவுலானா ஷகாபுத்தீன் ரிஜ்வீஎதிர்க்கட்சிகளை விமர்சித்துள்ளார். இந்து-முஸ்லிம் மோதல் வராமலிருப்பற்காக இந்த உத்தரவை காவல்துறையினர் அமலாக்கி வருவதாகவும் மவுலானா ரிஜ்வீ தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE