ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையில் ரகசிய சுரங்கத்தை அறிய லேசர் ஸ்கேனிங்

By செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலில் ரத்ன பண்டார் என்ற பொக்கிஷ அறை உள்ளது. இதற்குள் வெளி அறை மற்றும் உள் அறை என இரண்டு பகுதிகள் உள்ளன. இதில் பகவான் ஜெகந்நாதருக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட தங்கம், வெள்ளி, வைர ஆபரணங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்த ரத்ன பண்டார் கடந்த 46 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது.

ஒடிசா அரசின் உத்தரவின்படி கடந்த 14-ம் தேதி தொல்பொருள் ஆய்வு துறையினர் ரத்ன பண்டாரின் வெளி அறை பூட்டுகளை உடைத்து திறந்தனர். அங்கிருந்த சுவாமி சிலைகள் மற்றும் ஆபரணங்கள் தற்காலிக பெட்டக அறைக்கு மாற்றப்பட்டன.

இந்நிலையில் ரத்ன பண்டாரின் உள் அறை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இது குறித்து மேற்பார்வை குழுவின் தலைவர் விஸ்வநாத் ராத் கூறியதாவது:

ரத்ன பண்டாரின் உள் அறையில் இருந்த ஆபரணங்களை எடுத்து தற்காலிக பெட்டக அறைக்கு மாற்ற 7.5 மணி நேரம் ஆனது. ரத்ன பண்டாரின் உள் அறையில் உள்ள சுவர்களையும் நாங்கள் ஆய்வு செய்தோம். அங்கு ரகசிய சுரங்கம் இருப்பதாக தெரியவில்லை. இதற்கான ஆவணங்களும் இல்லை.

ரத்ன பண்டாரை பழுது பார்ப்பதில் தற்போது கவனம் செலுத்தப்படுகிறது. அந்தப் பணி முடிவடைந்த பிறகு, தற்காலிக பெட்டக அறையில் இருக்கும் ஆபரணங்கள் மீண்டும் ரத்ன பண்டாருக்கு கொண்டு செல்லப்படும். அதன் பிறகு ஆபரணங்களை் கணக்கிடும் பணிகள் தொடங்கும். இவ்வாறு விஸ்வநாத் ராத் கூறினார்.

ஒடிசாவில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோயிலின் ரத்ன பண்டார் அறையில் ரகசிய சுரங்கம் இருப்பதாகவும், அதற்குள்ளும் விலை மதிப்பு மிக்க ஆபரணங்கள் உள்ளதாகவும் சேவகர்களின் ஒரு பிரிவினர் கூறுகின்றனர்.

இது குறித்து ஜெகந்நாதர் கோயிலின் நிர்வாக கமிட்டி தலைவரும், புரி மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த கஜபதி மகாராஜா திவ்யசிங்தேவ் கூறுகையில், ‘‘இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அதிநவீன உபகரணங்கள் கொண்டு ரத்ன பண்டாரின் உள் அறையில் லேசர் ஸ்கேனிங் செய்யவுள்ளது. இதன் மூலம் ரத்ன பண்டாரின் உள் அறையில் ரகசிய சுரங்கம் உள்ளதா என்பது தெரியவரும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE