புதுடெல்லி: கன்வார் யாத்திரை வழித்தட உணவகங்களில் உரிமையாளர்களின் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை உத்தரப் பிரதேச அரசு திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “ஒவ்வொரு குடிமகனுக்கும் சாதி, மதம், மொழி அல்லது வேறு எந்த அடிப்படையிலும் பாகுபாடு காட்டப்பட மாட்டாது என்று நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதியளிக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் வண்டிகள், கடைகளில் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்கள் அடங்கிய பலகைகளை வைக்க வேண்டும் என்ற பிரித்தாளும் உத்தரவு நமது அரசியலமைப்பு, நமது ஜனநாயகம் மற்றும் நமது பொதுவான பாரம்பரியத்தின் மீதான தாக்குதலாகும். சாதி, மத அடிப்படையில் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரான குற்றமாகும். இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற்று, உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, உத்தரப் பிரதேச அரசின் இந்த உத்தரவுக்கு அம்மாநில முன்னாள் முதல்வர் மாயாவதியும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள வணிகர்கள் தங்கள் கடைகளில் உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் முழுப் பெயரையும் எழுத வேண்டும் என்று உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநில அரசுகள் உத்தரவிட்டிருக்கின்றன. இந்த வழித்தடத்தில் இறைச்சி விற்பனையைத் தடை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் அரசியலமைப்புக்கு எதிரானது. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களை, பொருளாதார ரீதியாக புறக்கணிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்திருந்தார்.
உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் ஒவ்வோர் ஆண்டும் இந்துக்களின் ஷ்ரவண மாதத்தில் (ஜூலை – ஆகஸ்ட்) கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த யாத்திரை மேற்கொள்ளும் சிவ பக்தர்கள் கன்வாரியாக்கள் என அழைக்கப்படுகின்றனர். வட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வருவார்கள். பிறகு அந்த கங்கை நீரைக் கொண்டு தங்கள் ஊர்களில் உள்ள சிவன் ஆலயங்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் நடத்துவார்கள்.
» “100 நாட்களுக்குள் ஒரு லட்சம் தடகள வீரர்கள் அடையாளம் காணப்படுவர்” - மத்திய அமைச்சர் தகவல்
» உ.பி அரசுப் பள்ளிகளில் தேநீர், பக்கோடா தயாரிப்பு தொழில் பயிற்சித் திட்டம் தொடக்கம்
இதற்கிடையே, உத்தரப் பிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஒவ்வொரு உணவகங்களும் அல்லது தள்ளுவண்டி உணவுக்கடைகள் உட்பட தங்கள் உரிமையாளரின் பெயரை உணவகத்தின் பெயர்ப் பலகையில் வைத்திருக்க வேண்டும்.
கன்வார் யாத்திரை மேற்கொள்பவர்களின் புனிதத்தை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று யோகி ஆதித்யநாத் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். கன்வர் யாத்திரை ஜூலை 22-ம் தேதி தொடங்க உள்ளதால் உத்தரப் பிரதேசம் முழுவதும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
முன்னதாக, முசாபர்நகர் மாவட்ட காவல் துறை மாவட்டத்தில் கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்களுக்கு இதே உத்தரவை உணவகங்களுக்கு விதித்தது. இது மாநிலத்தில் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. “மத நல்லிணக்கத்துக்கு இத்தகைய உத்தரவு கேடு விளைவிக்கும். மாநிலத்தின் இணக்கமான சூழலை கெடுக்கும்” என முன்னாள் முதல்வர்களான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மற்றும் அசாதுதீன் ஓவைஸி போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னர் முசாபர்நகர் காவல் துறை அந்த உத்தரவை ரத்து செய்தது. காவல்துறையால் ரத்து செய்யப்பட்ட ஒருநாள் கழித்து தற்போது உத்தரபிரதேச மாநில அரசு அதே உத்தரவை திரும்பப் பிறப்பித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
44 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago