உ.பி. விரைவு ரயில் விபத்து உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு: 32 பேர் காயம்!

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் கோண்டா அருகே சண்டிகர் - திப்ருகர் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தனர்.

சண்டிகரில் இருந்து அசாம் மாநிலத்தின் திப்ருகர் நகர் வரை செல்லும் சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சின் 8 பெட்டிகள், உத்தரப் பிரதேசத்தின் ஜுலாஹி ரயில் நிலையத்துக்கு சில கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்பு உள்ள பிகவுரா என்ற இடத்தில் வியாழக்கிழமை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கோண்டா மாவட்ட ஆட்சியர் நேஹா ஷர்மா உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.

இந்த நிலையில் விபத்து குறித்து ஆட்சியர் இன்று கூறுகையில், “இந்த விபத்தில் இதுவரை நான்கு பயணிகள் உயிரிழந்துள்ளனர். 32 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சுமார் ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உயிரிழந்தவர்களில் ராகுல் (38), சரோஜ் குமார் (31) மற்றும் இரண்டு அடையாளம் தெரியாதவர்கள் அடங்குவர். பெயர் தெரியாத ஒருவரின் உடல் வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டது.

படுகாயமடைந்த இரண்டு பயணிகள் லக்னோ தீவிர சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரைவு ரயில் தடம்புரண்ட விபத்துக்கு பின்னர் சண்டிகர் - திப்ருகர் விரைவு ரயிலின் 600 பயணிகளுடன் சிறப்பு ரயில் வியாழக்கிழமை இரவு அசாம் நோக்கி சென்றபோது நான் மான்காபூர் சந்திப்பில் இருந்தேன்" என்றார்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்வே தொழில்நுட்ப குழு நேற்றிரவு சம்பவ இடத்தை அடைந்து அங்கிருந்து மாதிரிகளை சேகரித்து விபத்து நடந்த இடங்களை புகைப்படம் எடுத்தது.

இதனிடையே, தண்டவாளத்தில் உள்ள ரயில் பெட்டிகள் மற்றும் சேதங்களை சீர்செய்து ரயில் போக்குவரத்தை சீர் செய்யும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “ஜெனரேட்டர் வெளிச்சத்தில் இரவு முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலையில் 800 ரயில்வே ஊழியர்கள் அடங்கிய குழு சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வடகிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் சவுமியா மாத்தூர் சம்ப இடத்திற்கு வந்து சூழ்நிலைகளை ஆராய்ந்து வருகிறார்.

சேதமடைந்த பெட்டிகள் கேஸ் கட்டர் மூலமாக பிரிக்கப்பட்டுள்ளன. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை ஜேசிபி மற்றும் கிரேயின் மூலமாக நிமிர்த்தி அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில் விபத்தில் முற்றிலுமாக பிடிங்கி எறியப்பட்ட ரயில் பாதையை புதிதாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோண்டா - கோராக்பூர் ரயில் தடம் முற்றிலும் மின்மயாக்கப்பட்டது. இந்த விபத்தினால் மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் முற்றிலுமாக சேதமைடந்துள்ளன. அவைகளை புதிதாக அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றது” என்று தெரிவித்தனர்.

இந்தநிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணை தவிர, உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது. அதேபோல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணத்தொகையாக வழங்கப்படும் என்றும் அமைச்சகம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE