கனமழை காரணமாக கேரளாவில் பள்ளிகளுக்கு விடுமுறை: கர்நாடகாவுக்கு ரெட் அலர்ட்

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக அதன் மேற்கு மலபார் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் வியாழக்கிழமை பெய்த கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடகேரள மாவட்டங்களான வயநாடு, கன்னூர் மற்றும் காசர்கோடு பகுதிகளில் வெள்ளம், மரங்கள் விழந்தது, சொத்துக்கள் சேதம் மற்றும் லேசான நிலச்சரிவு போன்ற பல சம்பவங்கள் பதிவாகின.

கனமழை காரணமாக இந்த மூன்று மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. மலப்புரம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் உள்ள அரீகோடு, கொண்டோட்டியிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கன்னூரில், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 80 பேர் நிவாரண முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல் 71 குடும்பத்தினர் மாவட்ட நிர்வாகத்தால் அவர்களின் உறவினர் வீடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கனமழை காரணமாக மாவட்டத்தில் 13 வீடுகள் முழுவதுமாக சேதமைடந்துள்ளன 242 வீடுகள் பகுதியளவுக்கு சேதமடைந்துள்ளன. வடக்கு கேரளாவின் சில பகுதிகளில் மழை காரணமாக சுவர்கள் இடிந்து விழுந்து அதன் கீழ்நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

கர்நாடகாவுக்கு ரெட் அலர்ட்: மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மற்றும் தெற்கு கர்நாடகாவின் உள்ளடங்கிய பகுதிகளில் மிக கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், ஜுலை 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தக்சின கர்நாடகா, உடுப்பி, உத்தர கன்னடா மற்றும் கர்நாடகாவின் உள்ளடங்கிய பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு 24 செ.மீ. வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

இந்தநிலையில், நிலச்சரிவு மற்றும் பாறை சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தால், சம்பாஜி மற்றும் மடிகேரி இடையேயான தேசிய நெடுஞ்சாலை 275 மூடப்படுவதாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். இந்தத் தடை ஜூலை 18 முதல் 22 வரை இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.

ஒடிசாவில் ஜூலை 23 வரை கன மழைக்கு வாய்ப்பு: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ஒடிசாவில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.

மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த இரண்டு நாட்களில் வலுபெற்று ஒடிசா கரையை நோக்கி நகரும் என்று பிராந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 19 முதல் 22 வரை மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE