அம்பானி குடும்ப திருமண விழாவில் விருந்தினருக்கு வளையல் சன்கிளாஸ் இலவசம்

By செய்திப்பிரிவு

மும்பை: ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் பங்கேற்க வந்த விருந்தினர்களுக்கு இலவசமாக பொருட்களை வழங்க பிரத்யேகமாக கடைகள் திறக்கப்பட்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

அம்பானி குடும்ப திருமண விழா மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில், உள்நாட்டு பிரபலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்த முக்கிய அரசியல், விளையாட்டு,சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த திருமணத்துக்காக ரூ.5,000 கோடி வரை செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

திருமண விழாவுக்கு வந்த முக்கிய விருந்தினர்களுக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் கைக்கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி அவர்கள் இலவசமாக ஷாப்பிங் செய்ய பிரத்யேகமாக கடைகளும் அமைக்கப்பட்டிருந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து இந்திய-அமெரிக்க ஸ்டாண்ட் அப் நகைச்சுவை நடிகர் ஆகாஷ் சிங்குடன் யூ டியூபரும் பாட்காஸ்ட் தொகுப்பாளருமான ரன்வீர் அல்லாபாடியா நடத்திய உரையாடலில் திருமண விழாவில் பொருட்களை இலவசமாக வழங்கியது குறித்து பேசப்பட்டது. ஆகாஷ் சிங் மேலும் கூறும்போது:

மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில்தான் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மற்றும் திருமணத்துக்கு பிந்தைய விழாக்கள் கோலாகலமாக நடைபெற்றன. கிரியேட்டிவ் டைரக்டர் மணீஷ் மல்ஹோத்ராவின் கைவண்ணத்தால் அந்த இடம் பழங்கால வாராணசி நகரம் போல மாற்றப்பட்டது. நாங்கள் ஒரு மாயாஜால உலகில் இருப்பதைப் போல உணர்ந்தோம்.

பெண் விருந்தினர்களுக்காக பிரத்யேகமான வளையல் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதேபோன்று, வெர்சேஸ் பிராண்ட் சன்கிளாஸ் கடைகள் அமைக்கப்பட்டு பல்வேறு விதமான கண்கண்ணாடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இவை அனைத்தும் விருந்தினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன என்பதுதான் அதன் சிறப்பம்சம்.

திருமண நடைபெறும் இடத்தில் நகைக்கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், தங்க நெக்லஸ்களை யாரும் இலவசமாக தரமாட்டார்களே என்று நகைச்சுவையுடன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE