நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை நாளை வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நாளை மதியம் 12 மணிக்குள் இணையதளத்தில் நீட் தேர்வு மதிப்பெண் பட்டியலை வெளியிடுமாறு தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை மீண்டும் ஜூலை 22-ம் தேதி நடைபெற உள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்ததால், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்தனர். நீட் தேர்வை ரத்துசெய்ய கூடாது என்று கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இந்த மனுக்கள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் மனுதாரர்கள் தரப்பில் நரேந்தர் ஹுடா,மேத்யூ நெடும்பராஉள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்ட னர். அவர்கள் கூறியதாவது:

நீட் தேர்வுக்கான பாடங்கள் குறைக்கப்பட்டதால் அதிக மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ)விளக்கம் அளித்துள்ளது. உண்மையில் பாடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்.

சுமார் 77 ஆயிரம் மாணவ, மாணவிகள் 550 முதல் 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டுகளைவிட மிக அதிகம். தேர்வுக்கு முந்தைய நாளான மே 4-ம் தேதி டெலிகிராம் சமூக வலைதளத்தில் நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

தேசிய தேர்வு முகமை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் கூறியதாவது: நாடு முழுவதும் 1.08 லட்சம் எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர தகுதி பெறாத 131 மாணவ, மாணவிகள் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முறையீடு செய்துள்ளனர். மருத்துவ கல்லூரிகளில் சேர தகுதி பெற்றுள்ள 254 பேர் மறுதேர்வு நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர்.

மே 4-ம் தேதியே டெலிகிராம் வலைதளத்தில் நீட் வினாத்தாள் கசிந்ததாக கூறப்படுவது தவறு.குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்என்பதற்காக, டெலிகிராமில் போலியான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 150 பேருக்குமட்டுமே வினாத்தாள் கிடைத்துள்ளது. பெரிய அளவில் முறைகேடுகள் நடக்கவில்லை. எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய தேவையில்லை. இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட் தனது உத்தரவில் கூறியதாவது: நீட் வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும்.

நாடு முழுவதும் 571 நகரங்களில் உள்ள எஸ்பிஐ, கனரா வங்கிகளின் கிளைகளுக்கு ஏப்ரல் 24 முதல் நீட் வினாத்தாள்கள் அனுப்பப்பட்டுள்ளன. சுமார் 6 - 9 நாட்கள் வரை தனியார் கூரியர் நிறுவனத்தின் பொறுப்பில் வினாத்தாள்கள் இருந்துள்ளன.

நீட் தேர்வு நடப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாகத்தான் வினாத்தாள் கசிந்தது என என்டிஏ தெரிவித்துள்ளது. அவ்வளவு குறுகியநேரத்துக்குள் வினாக்களுக்கான விடைகளை நிரப்பி, மாணவர்களுக்கு எப்படி வழங்கியிருக்க முடியும்.

பாட்னா, ஹசாரிபாக் ஆகிய 2நகரங்களில் மட்டுமே வினாத்தாள் கசிந்ததா அல்லது வேறு நகரங்களில் கசிந்ததா என்பதை கண்டறியவேண்டும். எனவே, நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளின் மதிப்பெண் பட்டியலை நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக ஜூலை 20-ம் தேதி (நாளை) மதியம் 12 மணிக்குள் என்டிஏ இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதில் மாணவர்களின் அடையாளம் மறைக்கப்பட வேண்டும். மாணவர்களின் தேர்வு எண்களுக்கு பதிலாக ‘டம்மி’ எண்களில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். ஜூலை 22-ம் தேதி வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும். இவ்வாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

வினாத்தாள் கசிவு: எய்ம்ஸ் மாணவர்கள் 4 பேர் கைது - நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக பாட்னா எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் படிக்கும் சந்தன்குமார், ராகுல் குமார், கரண் ஜெயின், குமார் சானு ஆகிய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீட் நுழைவு தேர்வில் இடம்பெற்ற வினாக்களுக்கான விடைகளை நிரப்பி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE