சமய பணிகளை விடுத்து பணம் சம்பாதிக்கும் துறவிகள் மீது அகாடா பரிஷத் நடவடிக்கை

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் 2025-ல் மகா கும்பமேளா நடைபெற உள்ளது. கங்கை, யமுனை மற்றும் பூமிக்கு அடியில் ஓடுவதாக நம்பப்படும் சரஸ்வதி ஆகியவை சங்கமிக்கும் இடத்தில் இந்த மகா கும்பமேளா நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை உ.பி. மாநில அரசுடன் இணைந்து அகில இந்திய அகாடா பரிஷத்தும் செய்து வருகிறது. இந்த அமைப்பானது அனைத்து வகை துறவிகளின் தலைமை சபையாக செயல்படுகிறது.

நாடு முழுவதிலும் இந்த அமைப்பில் உள்ள புனிதர்கள், மகாமண்டலேஷ்வரர்கள், மடாதிபதிகள் என பலவகை துறவிகள் குறித்து ஏப்ரல் 1 முதல் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இதில் சமயப் பணிகளை விடுத்து பணம் சம்பாதிப்பது உள்ளிட்ட தவறான நடவடிக்கைகளில் இறங்கியதாக 13 மகாமண்டலேஷ்வரர்கள் மற்றும் புனிதர்கள் அகாடாவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இத்துடன் 112 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நீக்கப்பட்ட 13 துறவிகளும் மகா கும்பமேளாவில் நுழைய அகாடா சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பப்பட்ட 112 பேரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும். பதில் அளிக்கத் தவறும் துறவிகளையும் மகா கும்பமேளாவில் அனுமதிப்பதில்லை என அகாடா பரிஷத் முடிவு செய்துள்ளது.

இந்த 112 துறவிகளில் ஜுனா அகாடாவில் 54, ஸ்ரீநிரஞ்சன் அகாடாவில் 24, நிர்மோஹி அகாடாவில் 34 பேர் உள்ளனர். மேலும்இந்த 112 துறவிகளில் 13 மகாமண்டலேஷ்வரர்கள், 24 மண்டலேஷ்வரர்கள் மற்றும் மடாதிபதிகளும் இடம் பெற்றுள்ளனர்.

சென்னையின் ஹரேந்திரானந்த்: மகாநிர்வாணி அகாடாவின் பொதுச் செயலாளர் ஸ்ரீ மஹந்த்ராஜேந்திர தாஸ், தமது அகாடாவிலிருந்து 13 மகாமண்டலேஷ்வரர்களை நீக்கியுள்ளார். இதில் நாசிக்கின் ஜெயேந்திர தாஸ், சென்னையின் ஹரேந்திரானந்த், அகமதாபாத்தின் மகந்த் ராம் தாஸ், உதய்பூரின் அவிதுணானந்த், கொல்கத்தாவின் மஹந்த் விஜேயேஷ்வர் தாஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அகில இந்திய அகாடா பரிஷத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பும் உருவாகி வருகிறது. இது வலுவடைந்து மகா கும்பமேளா நாட்களில் துறவிகள் இடையே கருத்து மோதல் ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE