நீட் வினாத்தாள் கசிவு: பாட்னாவில் 4 மருத்துவ மாணவர்களிடம் சிபிஐ விசாரணை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக பாட்னா எய்ம்ஸ் மருத்துமனையைச் சேர்ந்த நான்கு இளநிலை மருத்துவ மாணவர்களை சிபிஐ தடுப்பு காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்த நால்வரும் 2021 பிரிவைச் சேர்ந்த மாணவர்கள்.

அவர்களின் அறையை சீல்வைத்த சிபிஐ அதிகாரிகள், நால்வருக்குச் சொந்தமான லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

காவலில் வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களில், மூன்று பேர் மூன்றாம் ஆண்டு, மற்றொருவர் இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பு படிக்கின்றனர். மேலும், இதில் மூன்று பேர் பிஹாரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தைச் சேர்ந்தவர்.

முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக நேற்று இருவரை சிபிஐ கைதுசெய்தது. பிஹாரின் பாட்னாவை சேர்ந்த பங்கஜ் குமார், ஜார்கண்டில் உள்ள ஹசாரிபாக்கை சேர்ந்த ராஜு சிங் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். வினாத்தாளை கசியவிடும் மாஃபியா கும்பலில் தொடர்புடையவர் பங்கஜ் குமார். அவர் ராஜு சிங்கின் உதவியுடன் நீட் வினாத்தாள்களைத் திருடியதாக சிபிஐ அதிகாரிகள் கூறுகின்றனர்.

தற்போது இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று (மே 5) மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியாகி பேசுபொருளாக மாறியது. இதேபோல், பிஹார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. ஜார்க்கண்ட், குஜராத்,மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது தெரியவர, இதுதொடர்பாக அந்தந்த மாநிலங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மத்திய கல்வித் துறையின் பரிந்துரையின் பேரில் குஜராத் உட்பட 6 மாநிலங்களில் பதிவான வழக்குகள் கடந்த 23-ம் தேதி சிபிஐ-க்கு மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து பிஹார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE