கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பு: எதிர்ப்பால் மசோதா நிறுத்திவைப்பு

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் 100% கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியான நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் செயல்படும் அனைத்து தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு 100 சதவீத கட்டாய‌ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கன்னட அமைப்பினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக கர்நாடக அரசு தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என முதல்வர் சித்தராமையாவை சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிலையில் கடந்த 15-ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ‘தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மசோதா 2024'-க்கு ஒப்புதல் பெறப்ப‌ட்டது.

இந்த மசோதாவில், ‘‘கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகளில் கன்னடம் தெரிந்த கர்நாட‌காவை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் நிர்வாக பிரிவில் 50 சதவீதமும், நிர்வாகம் அல்லாத பிரிவில் 75 சதவீதமும் கட்டாயமாக வழங்க வேண்டும். இதை மீறும் நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் வலைதள பதிவில், ‘கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் குரூப் சி மற்றும் டி பிரிவில் கன்னடர்களுக்கே 100 சதவீத வேலைவாய்ப்பும் வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது' என்று தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பதிவை நீக்கினார். ஆனால், 100% இடஒதுக்கீடுக்கான மசோதா, சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாகவே தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியாங்க் கார்கே ஆகியோர் நேற்று மாலை முதல்வர் சித்தராமையாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் எம்.பி.பாட்டீல் கூறும்போது, ‘‘மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பாக ஆழமாக விவாதிக்கப்பட உள்ளது. தொழில் துறையினரின் கருத்துகளையும் கேட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்வர் சித்தராமையா நேற்று இரவு வெளியிட்ட வலைதள பதிவில், ‘மசோதா, தொடக்க நிலையில் உள்ளது. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி விவாதித்து, ஒப்புதல் அளித்த பிறகு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார். எதிர்ப்பு காரணமாக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கர்நாடக அரசுக்கு தொழில் துறையினர் கடும் எதிர்ப்பு: தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே 100% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற மசோதாவுக்கு தொழில் துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இத்துறையினர் கூறியுள்ளதாவது:

மணிபால் கல்வி குழுமங்களின் தலைவர் மோகன்தாஸ் பாய்: இந்த மசோதா அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இன அடிப்படையில் பாகுபாடு காட்டும் வகையில் உள்ளது. மிருகத்தனமான‌ பாசிச குணத்தை கொண்டிருக்கிறது.

பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜூம்தார் ஷா: தகவல் தொழில்நுட்ப துறையில் திறமைக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும். தொழில்நுட்ப வல்லுநர்களை அமர்த்துவதில் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று சொல்ல கூடாது.

யூலு நிறுவனத்தின் இணை நிறுவனர்ஆர்.கே.மிஸ்ரா: கர்நாடக அரசின் இந்த முடிவு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை அச்சுறுத்தக் கூடியதாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த மசோதா நிறைவேறினால், கர்நாடகாவைவிட்டு வெளியேறுவோம் என்று சில நிறுவன‌ங்களின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். ‘திறமையின் அடிப்படையில்தான் தனியார் நிறுவனங்களில் ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது. அதில் இன அடிப்படையில் ஆள்சேர்ப்பு நடத்தக் கோருவது நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மசோதாவை தாக்கல் செய்ய கூடாது’ என தேசிய மென்பொருள் நிறுவன கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE