பொது தேர்வில் மாணவர்களுக்கு விடைகளை சொல்லி தந்து மோசடி: ராஜஸ்தானில் ஆசிரியர்கள் பிடிபட்டனர்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில திறந்தநிலை பள்ளி வாரியம் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தி வருகிறது.

இத்தேர்வின்போது தேர்வு அறையில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க ராஜஸ்தான் கல்வித்துறையின் தேர்வு கண்காணிப்புக் குழு திடீர் சோதனையில் ஈடுபட்டது. அப்போது ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொலு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு விடைகளை சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.

இது தொடர்பாகத் தேர்வு கண்காணிப்புக் குழு தலைவர் நிஷி ஜெயின் கூறுகையில்: குறிப்பிட்ட பள்ளியில் தேர்வின்போது மோசடி நடந்துவருவதாகஎங்களுக்குத் துப்பு கிடைத்தது. சோதனை நடத்த நாங்கள் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு வந்தபோது, நுழைவாயில் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டோம். மதில் சுவர் ஏறிக் குதித்து பள்ளிக்கூட வளாகத்துக்குள் நுழைந்தோம்.

அப்போது தேர்வறைகளில் உள்ள கரும்பலகைகளில் கேள்வித்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகளை ஆசிரியர்கள் எழுதிக் கொண்டிருந்தனர். மாணவர்கள் காப்பி அடிக்க உதவும்விதமாக இத்தகைய ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி அந்த பள்ளியின் பல தேர்வறைகளில் நடந்து கொண்டிருந்தது. அத்தனையும் கேமராவில் காணொலியாகப் பதிவு செய்தோம்.

தப்பியோட்டம்: மேலும் அங்குத் தேர்வெழுதிய மாணவர்களிடம் விசாரணை நடத்தியபோது இத்தகைய குறுக்குவழிக்கு உதவ ஆசிரியர்களுக்கு ரூ. 2000 வரை லஞ்சம் கொடுக்கப்படுவதையும் கண்டுபிடித்தோம். இதுபோதாதென்று, அடையாளம் காணப்பட்ட அனசுயா மற்றும் கோமல் வர்மா ஆகிய இரண்டு ஆசிரியர்கள் ஆள்மாறாட்டம் செய்து மாணவர்களுக்குப் பதில் தேர்வெழுதிக் கொண்டிருந்த நிலையில் பிடிபட்டனர். நடந்த சம்பவம் கல்வி அதிகாரிகள் மூலம் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் வருவதற்குள் ஆள்மாறாட்டம் செய்த இருவரும் தப்பி ஓடினர். குற்றத்தில் தொடர்புடைய பள்ளி தலைமைஆசிரியர் ராஜேந்திர சிங் சவுகான்உட்பட 10 ஆசிரியர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஒழுங்கு நடவடிக்கை: இந்த விவகாரம் குறித்து பலோதி வட்டார கல்வி அலுவலர்கிஷோர் போக்ரா கூறுகையில், “தேர்வு மோசடிக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3-ம் வகுப்பு பாட ஆசிரியர்கள் ஆறு பேர் மற்றும்ஒரு நூலகர் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிதலைமை ஆசிரியர் மீது ஒழுங்குநடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE