ஏர் இந்தியாவில் வேலை: 1000+ பணியிடங்களுக்காக மும்பையில் திரண்ட 15,000+ இளைஞர்கள்!

By செய்திப்பிரிவு

மும்பை: ஏர் இந்தியா நிறுவனம் நடத்திய நேர்காணலில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தததால் மும்பையில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தில் 2,216 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஏர் இந்தியா நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருந்தது. இதற்கான நேர்காணலில் கலந்து கொள்ள விரும்புவர்கள் நேரடியாக மும்பை கலினா பகுதியில் உள்ள அலுவலகத்துக்கு வருமாறு கூறப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று (ஜூலை 16) மும்பையில் உள்ள ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் அலுவலகத்தின் முன்பு காலை முதலே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவியத் தொடங்கினர். சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் குழுமியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பலரும் சுவர்கள், வாகனங்கள், மரங்கள் ஆகியவற்றின் மீது ஏறி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பெரும் விபத்து ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் அங்கு வந்த அலுவலக ஊழியர்கள் இளைஞர்களிடம் தங்களின் பயோடேட்டாக்களை ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறும், தகுதியுள்ள நபர்கள் மீண்டும் அழைக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தனர்.

இதன்பிறகே கூட்டம் அங்கிருந்து கலைந்து சென்றது. இதனால் அங்கு உயிரிழப்பு சம்பவங்கள் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விமானப் போக்குவரத்துத் துறை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜார்ஜ் ஆப்ரம், இந்த நேர்காணல் மோசமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த நேர்காணலுக்காக புல்தானா மாவட்டத்தில் இருந்து சுமார் 400 கி.மீ பயணம் செய்து வந்த பிரதமேஸ்வர் என்ற இளைஞர் கூறும்போது, “உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்காக நான் வந்துள்ளேன். ரூ.22 ஆயிரம் சம்பளம் தருவதாக கூறினார்கள். நான் தற்போது பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு வேலை கிடைத்தால், படிப்பை விட வேண்டியிருக்கும். வேறு என்ன செய்வது? நாட்டில் கடும் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்குமாறு நான் அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

ராஜஸ்தானில் இருந்து இந்த நேர்காணலில் கலந்து கொள்ள வந்த இளைஞர் ஒருவர் கூறும்போது, “நான் எம்.காம் முடித்துள்ளேன். ஆனால் அடிப்படையான கல்வித் தகுதி போதுமான ஒரு வேலைக்காக தான் இங்கு வந்துள்ளேன். எனக்கு வேலை தேவை. நான் அரசுத் தேர்வுக்கும் தயாராகிக் கொண்டிருக்கிறேன். இங்கே நல்ல சம்பளம் தருவதாக கேள்விப்பட்டதால் இங்கு வந்தேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE