கரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம்: 51% விண்ணப்பங்கள் நிராகரிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் பெறப்பட்டவற்றில் சுமார் 51% விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு மே 29-ம் தேதி தொடங்கப்பட்டது. குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம் மார்ச் 11, 2020 முதல் மே 05, 2023 வரை கரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோர்கள் இருவரையோ, அல்லது உயிருடன் இருந்த பெற்றோரில் ஒருவரையோ, அல்லது சட்டரீதியான பாதுகாவலரையோ, அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ, அல்லது தத்தெடுத்த ஒற்றை பெற்றோரையோ இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்பத்தை நோக்கமாக கொண்டது.

அதன்படி, கரோனா பாதிப்பால் ஆதரவற்ற குழந்தைகளாக மாறியவர்களுக்கு, விரிவான பாதுகாப்பை அளிப்பது, கல்வி மற்றும் கல்வி உதவித் தொகை மூலம் மேம்படுத்துவது, 23 வயதை எட்டும் போது ரூ.10 லட்சம் நிதியை பெற்று தற்சார்புடையவர்களாக ஆக்குவது, சுகாதார காப்பீடு மூலம் அவர்களின் நலனை உறுதி செய்கிறது இத்திட்டம். இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களில் சுமார் 51% நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்த தகவலின்படி, நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 613 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 9,331 விண்ணப்பங்கள் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன. இதில், 558 மாவட்டங்களில் சேர்ந்த 4,532 விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 18 விண்ணப்பங்கள் அனுமதிக்காக நிலுவையில் உள்ள நிலையில், 4,781 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனினும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

மகாராஷ்டிராவில் இருந்து 855 விண்ணப்பங்களும், ராஜஸ்தானில் இருந்து 210 விண்ணப்பங்களும், உத்தரப் பிரதேசத்தில் இருந்து 467 விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE