நியூயார்க்கில் தேர் திருவிழா நடைபெற உதவிய ட்ரம்ப் உயிரை காப்பாற்றிய ஜெகந்நாதர்: இஸ்கான் தலைவர்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: நியூயார்க் நகரில் தேர் திருவிழா நடைபெற உதவிய டொனால்டு ட்ரம்ப் உயிரை ஜெகந்நாதர் காப்பாற்றி விட்டார் என இஸ்கான் அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பட்லர் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ட்ரம்ப்பின் காதில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் நூலிழையில் உயிர் தப்பினார். துப்பாக்கிச்சூடு நடத்திய 20 வயது இளைஞரை பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். இது குறித்து அமெரிக்காவின் புலனாய்வு குழுவினர் விசாரிக் கின்றனர்.

இதுகுறித்து சர்வதேச கிருஷ்ணன் பக்தி இயக்கத்தின் (இஸ்கான்) கொல்கத்தா பிரிவு துணைத் தலைவர் ராதாராம் தாஸ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 48 ஆண்டுகளுக்கு முன்பு (1976 ஜூலை) ஜெகந்நாதர் தேர் திருவிழாவை நடத்த டொனால்டு ட்ரம்ப் உதவினார். இப்போது, ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது, அவரை ஜெகந்நாதர் காப்பாற்றி விட்டார்” என பதிவிட்டுள்ளார்.

கடந்த 1976-ம் ஆண்டு இஸ்கான் அமைப்பு, 10-வது ஆண்டை முன்னிட்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முதல் முறையாக ஜெகந்நாதர் தேர் திருவிழா நடத்த திட்டமிட்டது. இதில் 2 முட்டுக்கட்டைகள் ஏற்பட்டன. முதலாவதாக காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் காவல் துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து மன்ஹாட்டன் காவல்துறை தலைவரிடம் சிறப்பு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. அவர்இதற்கு அனுமதி அளித்தார்.

இரண்டாவதாக, தேரை வடிவமைப்பதற்கான இடம் தேர்வுசெய்யும்போது பிரச்சினை ஏற்பட்டது. பென்சில்வேனியா ரயில் யார்டுபொருத்தமாக இருக்கும் என கருதப்பட்டது. ஆனால், அந்த இடத்தை வாங்கியிருந்த பல்வேறு தொழிலதிபர்கள் சட்ட ரீதியாக பிரச்சினை எழும் என்று கூறி அனுமதி மறுத்தனர்.

எனினும், அந்த ரயில் யார்டின் ஒரு பகுதியை அப்போதைய ரியல் எஸ்டேட் இளம் தொழிலதிபர் ட்ரம்ப் வாங்கியிருந்தார். அவரிடம்அனுமதி கேட்கலாமா என யோசித்தனர். அவரும் மறுத்துவிடுவாரோ என சந்தேகித்தனர். எனினும் கேட்டுப் பார்ப்போம் என முடிவு செய்தனர்.

அனுமதி: மகா பிரசாதத்துடன் ட்ரம்ப் அலுவலகம் சென்று கோரிக்கை வைத்தனர். அனுமதி கொடுக்க மாட்டார் என ட்ரம்ப் ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால், 3 நாட்கள் கழித்து இஸ்கான் அமைப்பினரை அழைத்த ஊழியர்கள், அந்த இடத்தை பயன்படுத்திக் கொள்ள ட்ரம்ப் அனுமதி வழங்கிவிட்டார் என தெரிவித்தனர். இதனால் தேர் வடிவமைக்கப்பட்டு தேர் திருவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE