‘கேஜ்ரிவாலின் எடை 2 கிலோ மட்டுமே குறைந்தது’ - ஆம் ஆத்மி குற்றச்சாட்டுக்கு திகார் சிறை வட்டாரங்கள் விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் எடை 8.5 கிலோ குறைந்துவிட்டதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டி இருந்த நிலையில், 2 கிலோ மட்டுமே குறைந்துள்ளதாக திகார் சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டெல்லி அமைச்சர் அதிஷி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசும்போது, "கேஜ்ரிவாலை சிறையில் அடைத்து அவரது உடல்நிலைக்கு கேடு விளைவிக்க சதி நடக்கிறது. நீரிழிவு நோயாளியான அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்கவில்லை. அவர் 8.5 கிலோ எடையை இழந்துள்ளார். சிறையில் ஐந்து முறைக்கு மேல் அவரது சர்க்கரை அளவு 50 mg/dL-க்குக் கீழே குறைந்துள்ளது" என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் வகையில், திகார் சிறைத் துறை, டெல்லி அரசின் உள்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை திகார் சிறைத் துறை வட்டாரங்கள் பகிர்ந்துள்ளன. அந்தக் கடிதத்தில், "திகார் சிறையில் இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அவரது வீட்டில் இருந்து 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது. அந்த உணவின் ஒரு பகுதியை அவர் ஒவ்வொருமுறையும் திருப்பி அனுப்பிவிடுகிறார். அவரது உடல்நிலையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்களோடு, கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா தொடர்பில் இருக்கிறார்.

கேஜ்ரிவாலின் உடல்நிலை அறிக்கையின்படி, ஏப்ரல் 1-ம் தேதி அவர் முதன்முறையாக திகார் சிறைக்கு வந்தபோது 65 கிலோ எடையுடன் இருந்தார். ஏப்ரல் 8 முதல் 29 வரை 66 கிலோ எடையுடன் இருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே சென்றார். 21 நாட்கள் ஜாமீன் முடிந்து ஜூன் 2-ம் தேதி அவர் மீண்டும் சிறைக்குத் திரும்பியபோது, ​​அவரது எடை 63.5 கிலோவாக இருந்தது. ஜூலை 14 அன்று அவரது எடை 61.5 கிலோவாக இருந்தது. இந்த வகையில் அவரது எடை 2 கிலோ குறைந்துள்ளது.

'கேஜ்ரிவால் கோமா நிலைக்கு செல்லலாம்' என்றெல்லாம் ஆம் ஆத்மியினர் கூறுகின்றனர். இதுபோன்ற கருத்துகள் தவறானவை. பொதுமக்களை குழப்பும், தவறாக வழிநடத்தும் மற்றும் சிறை நிர்வாகத்தை வளைக்கும் உள்நோக்கம் கொண்டவை. கேஜ்ரிவாலின் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுகள் மற்றும் எடை ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு உள்ள அனைத்து நோய்களுக்கும் போதுமான சிகிச்சை அளிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஒரு அறிக்கையில், "கேஜ்ரிவாலின் சர்க்கரை அளவு பல மடங்கு குறைந்ததையும், அவர் உடல் எடை குறைந்ததையும் திகார் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். கேஜ்ரிவால் தூங்கும்போது சர்க்கரை அளவு குறைந்தால் அவர் கோமா நிலைக்குச் செல்லலாம் அல்லது மூளைச்சாவு அடையலாம்" என்று கூறியுள்ளார்.

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு பணமோசடி வழக்கில், மார்ச் 21 அன்று, அமலாக்க இயக்குநரகத்தால் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். கடந்த ஜூன் 26-ம் தேதி திகார் சிறையில் இருந்து ஊழல் வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயால் கைது செய்யப்பட்டார். பணமோசடி வழக்கில் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. எனினும், சிபிஐ வழக்கு காரணமாக அவர் தொடர்ந்து சிறையில் இருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE