புதுடெல்லி: மத்திய பிரதேசத்தின் போஜ்சாலா இந்துக்களின் கோயிலா அல்லது முஸ்லிம்களின் மசூதியா எனும் சர்ச்சை தீவிரமாகி வருகிறது. இதில் களஆய்வு நடத்திய இந்திய தொல்லியல் ஆய்வகம் (ஏஎஸ்ஐ), இந்துக் கடவுள் சிலைகளும் இருப்பதாகக் குறிப்பிட்டு 2,000 பக்க அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் தற்போதைய தார் எனும் தாரா பகுதியை ஆண்டுவந்த மன்னர் போஜ். 12-ஆம் நூற்றாண்டில் இவர் ஒரு சரஸ்வதி கோயிலை அமைத்து அதில் வேதபாட சாலையும் துவக்கியுள்ளார். இப்பகுதியை, போரிட்டுக் கைப்பற்றிய முகலாயப் பேரரசரான அவுரங்கசீப், போஜ்சாலாவை மசூதியாக மாற்றியதாகப் புகார் உள்ளது. இதற்கு ஆதாரமாக அம்மசூதியில் அமைந்த கல்தூண்களில் இந்து தேவிகளின் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. இதை பொருட்படுத்தாமல், அப்பகுதியின் முஸ்லிம்கள் அங்கு தொழுகையை தொடர்கின்றனர். இதனால், அயோத்தி, வாரணாசி மற்றும் மதுராவை போல் போஜ்சாலாவிலும் ஒரு பிரச்சினை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது.
சுமார் ஒன்றரை ஏக்கரில் அமைந்த போஜ்சாலாவினுள் கல்தூண்களிலான வரலாற்று மண்டபம் அமைந்துள்ளது. இதை இந்துக்கள் வாக்தேவி (சரஸ்வதி) கோயில் எனவும், முஸ்லிம்கள் கமால் மவுலானா மசூதி என்றும் கூறி வருகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் தொழுகையும், வருடம் ஒருமுறை வசந்த பஞ்சமியில் இந்துக்கள் பூஜையும் நடத்துகின்றனர்.
பாபர் மசூதி இடிப்புக்கு பின் அதிகரித்த பிரச்சினையால், இரண்டு தரப்பினரையும் அனுமதிக்காமல், போஜ்சாலாவை இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) தன் கட்டுப்பாட்டில் வைத்தது. பிறகு, கடந்த ஏப்ரல் 7, 2003-ல் ஒரு புதிய வழிகாட்டுதலை ஏஎஸ்ஐ வெளியிட்டது. இதன்படி, குறிப்பிட்ட எண்ணிக்கையில் அப்பகுதி முஸ்லிம்களுக்கு, வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தொழுகைக்கு அனுமதித்தது.
» டி.கே.சிவகுமார் மீது சிபிஐ பதிந்த ஊழல் வழக்கை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
» நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கே.பி.சர்மா ஒலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இதே நிபந்தனையுடன் இந்துக்களுக்கும் அதே இடத்தில் செவ்வாய்கிழமைகளில் பூஜைக்கு அனுமதித்தது. ஏஎஸ்ஐயின் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய பிரதேசத்தின் இந்தூர் உயர் நீதிமன்ற கிளையில் ’நீதிக்கான இந்து முன்னணி’ எனும் அமைப்பு வழக்கு தொடுத்தது. இவ்வழக்கை தொடர்ந்து விசாரிக்க, கடந்த ஏப்ரல் 1-ல் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. எனினும், போஜ்சாலாவில் களஆய்வு நடத்த மார்ச் 11-ல் இடப்பட்ட உத்தரவு குறித்து நீதிமன்றம் எதுவும் கூறவில்லை.
இந்நிலையில், மத்திய அரசின் ஏஎஸ்ஐ ஆய்வாளர்கள் கடந்த மார்ச் 22-ல் தம் களஆய்வை போஜ்சாலாவில் துவக்கினர். மேலும் 10 நாள் நீதிமன்ற உத்தரவுடன் மொத்தம் 98 நாட்களாக ஆய்வு நடத்தப்பட்டது. இதன் அறிக்கை, இந்தூர் உயர் நீதிமன்றக் கிளையின் அமர்வின் முன் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது இந்து மற்றும் முஸ்லிம்கள் தரப்பினர் பார்வையாளர்களாக இருந்தனர். சுமார் 2,000 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், போஜ்சாலாவில் கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் பலவும் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது.
இது குறித்து ஏஎஸ்ஐ ஆய்வின் போது இந்துகளின் தரப்பில் உடன் இருந்த போஜ்சாலா முக்தி யோஜ்னாவின் அமைப்பாளரான கோபால் சர்மா கூறும்போது, ‘சிவன், ஏழு தலைகள் கொண்ட வாசுகி நாகம் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.
சுமார் 1,700 கலைப்பொருட்களும் இருப்பது தெரிந்தது. இவற்றில் சுவரோவியங்கள், சிற்பங்கள், சிலைகள் போன்றவற்றின் காலங்களை அறிய கார்பன் டேட்டிங்கையும் ஏஎஸ்ஐ செய்துள்ளது.’ எனத் தெரிவித்தார்.
இந்த வழக்கில் இந்துக்கள் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறும்போது, ‘ஏஎஸ்ஐயின் அறிக்கையின்படி போஜ்சாலா ஒரு இந்து கோயில் என்பதற்கான பல ஆதாரங்கள் உள்ளன. இதை மசூதியாக மாற்றி முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். எனவே, இதன் முக்கிய மனு மீது தடை விதித்த வழக்கை உச்ச நீதிமன்றம் விரைந்து விசாரிக்க கோரி மனு அளிப்போம்.’ எனத் தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்பான தொல்லியல் சின்னம் என்பதால் போஜ்சாலா தற்போது, ஏஎஸ்ஐ வசம் உள்ளது. இதன் மீது ஆங்கிலேயர்கள் தம் ஆட்சியில் களஆய்வு நடத்தி அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அப்போது அதில், போஜ்சாலாவினுள் ஒரு கோயிலும் அதன் ஒரு பகுதியாக மசூதியும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கள ஆய்வைத்தான் விரிவாக நடத்தும்படி, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இந்த களஆய்வு குறித்த விசாரணையை ஜூலை 22-ல் உயர் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago