கர்நாடகாவில் கனமழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதாலும், இன்னும் சில நாட்களில் அம்மாநில அணைகள் அனைத்தும் நிரம்பும் என்பதாலும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் உள்ள 6 முக்கிய அணைகள் மற்றும் தடுப்பணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கனமழை காரணமாக உத்தர கன்னடா மாவட்டத்தில் இன்று (திங்கள்) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நாளை (ஜூலை 16 வரை) கர்நாடகாவில் கனமழை நீடிக்கும் என மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், உத்தர கன்னடா மாவட்டத்தில் அதிகபட்சமாக 20 செ.மீ.-க்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. உத்தர கன்னடா மாவட்டத்தில் ஜூலை 14-ம் தேதி மதியம் 1 மணி முதல் ஜூலை 16-ம் தேதி இரவு 8.30 மணி வரை கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மகாராஷ்டிரா - வடக்கு கேரளா கடற்கரையில் தற்போதுள்ள காற்றழுத்தம் காரணமாகவும், ஆந்திராவின் கடலோர மேற்கு-மத்திய வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சி காரணமாகவும் கர்நாடகாவில் கனமழைக்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காவிரி மற்றும் கிருஷ்ணா படுகையில் உள்ள அணைகளுக்கு வரும் வாரத்தில் அதிகளவு நீர்வரத்து இருக்கும் என வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர். மத்திய நீர் ஆணையம் கர்நாடகாவில் உள்ள ஆறு அணைகள் மற்றும் தடுப்பணைகளுக்கான நீர்வரத்து முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபிணி நீர்த்தேக்கத்தின் அளவு 85 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கபிணி அணையில் இருந்து விநாடிக்கு 20,000 கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 5,000 கனஅடிக்கும் மேலும் என 25,000 கனஅடிக்கும் அதிகமான உபரிநீர், காவிரியில் திறக்கப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தொடரும் பட்சத்தில், வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE