13 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன? | HTT Explainer

By நிவேதா தனிமொழி

தமிழகம், மேற்கு வங்கம், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம் , இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், பிஹார் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த முதல் இடைத்தேர்தல் என்பதால் பலராலும் உற்று நோக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.

13 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 2 இடங்களில் பாஜகவும், 4 இடங்களில் திரிணமூல் காங்கிரஸும், 4 இடங்களில் காங்கிரஸும், 1 இடத்தில் திமுகவும், 1 இடத்தில் ஆம் ஆத்மியும், சுயேச்சை வேட்பாளர் ஓர் இடத்திலும் வென்றி பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் 10 இடங்களில் வென்றிருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் என்னவென்று பார்க்கலாம்:

விக்கிரவாண்டி தொகுதி
வெற்றி: அன்னியூர் சிவா (திமுக) - 1,24,053 வாக்குகள்
இரண்டாம் இடம்: அன்புமணி (பாமக) - 56,296​​ வாக்குகள்
வாக்கு வித்தியாசம்: 67,757
ஏற்கனவே, திமுக வேட்பாளர்தான் இந்தத் தொகுதியில் வென்றிருந்தார். தற்போது திமுகவே தொகுதியை மீண்டும் கைப்பற்றியுள்ளது.

மேற்கு வங்கம்: பாக்தா, ரனாகாட் தக்‌ஷின், மணிக்தலா மற்றும் ராய்கஞ்ச் ஆகிய 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது.

மணிக்தலா தொகுதி:
வெற்றி: சுப்தி பாண்டே (திரிணமூல் காங்கிரஸ்) - 83,110 வாக்குகள்
இரண்டாம் இடம்: கல்யாண் சௌபே (பாஜக) - 20,798 வாக்குகள்
வாக்கு வித்தியாசம்: 62,312
கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் திரிணமூல் காங்கிரஸ் இந்தத் தொகுதியில் வென்றது. அக்கட்சியே மீண்டும் இந்தத் தொகுதியைக் கைப்பற்றியுள்ளது.

பாக்தா தொகுதி:
வெற்றி: மதுபர்ணா தாக்கூர் (திரிணமூல் காங்கிரஸ் ) - 1,07,706 வாக்குகள்
இரண்டாம் இடம்: பினய் குமார் பிஸ்வாஸ் (பாஜக) - 74,251 வாக்குகள்
வாக்கு வித்தியாசம்: 33,455
கடந்த 2021-ம் ஆண்டு பாஜக வென்ற தொகுதியைக் கைப்பற்றியுள்ளது திரிணமூல் காங்கிரஸ்.

ரனாகாட் தக்ஷின் தொகுதி:
வெற்றி: முகுத் மணி அதிகாரி (திரிணமூல் காங்கிரஸ் ) - 1,13,533 வாக்குகள்
இரண்டாம் இடம்: மனோஜ் குமார் பிஸ்வாஸ் (பாஜக) - 74,485 வாக்குகள்
வாக்கு வித்தியாசம்: 39,048
கடந்த தேர்தலில் பாஜக சார்பாகப் போட்டியிட்டு வென்ற முகுத் மணி அதிகாரி திரிணமூல் கட்சிக்குத் தாவினார். இந்தத் இடைத்தேர்தலில் அவரே திரிணமூல் கட்சி வேட்பாளராகக் களமிறங்கி வென்றிருக்கிறார்.

ராய்கஞ்ச் தொகுதி:
வெற்றி: கிருஷ்ண கல்யாணி (திரிணமூல் காங்கிரஸ் ) - 86,479 வாக்குகள்
இரண்டாம் இடம்: மானஸ் குமார் கோஷ் (பாஜக) - 36,402 வாக்குகள்
வாக்கு வித்தியாசம்: 50,077
கடந்த தேர்தலில் பாஜக கட்சி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட கிருஷ்ண கல்யாணி, இம்முறை திரிணமூல் கட்சி வேட்பாளராகக் களமிறங்கி வெற்றி பெற்றிருக்கிறார். ஆகவே, மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை 4 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதில் 3 இடங்களில் கடந்த முறை பாஜக வெற்றிப் பெற்றிருந்தது. இந்த 3 இடங்களை இழந்துள்ளது பாஜக என்பதைக் கவனிக்க வேண்டும்.

இமாச்சல் பிரதேசம்: ஹமிபூர், டெஹ்ரா மற்றும் நலகர் ஆகிய 3 தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது.

ஹமிபூர் தொகுதி:
வெற்றி: ஆஷிஷ் ஷர்மா (பாஜக) -27,041 வாக்குகள்
இரண்டாம் இடம்: புஷ்பிந்தர் வெர்மா (காங்கிரஸ்) -25,470 வாக்குகள்
வாக்கு வித்தியாசம்: 1571 வாக்குகள்
2022-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கி ஆஷிஷ் ஷர்மா வெற்றி பெற்றார். பின்னர், அவர் பாஜகவில் இணைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஆஷிஷ் ஷர்மா பாஜக சார்பாகக் களமிறங்கி வெற்றி பெற்றிருக்கிறார். ஆகவே, பாஜகவுக்கு கூடுதலாக ஓர் இடம் கிடைத்துள்ளது.

டெஹ்ரா தொகுதி:
வெற்றி: கமலேஷ் தாக்கூர் (காங்கிரஸ்) - 32,737 வாக்குகள்
இரண்டாம் இடம்: ஹோஷியர் சிங் (பாஜக) - 23,338 வாக்குகள்
வாக்கு வித்தியாசம்:9399
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்ற ஹோஷியர் சிங் பாஜகவில் இணைந்தார். ஆகவே, அங்கு இடைத்தேர்தல் நடந்திருக்கிறது. பாஜக சார்பாக களமிறங்கிய ஹோஷியர் சிங் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு, அங்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நலகர் தொகுதி:
வெற்றி : ஹர்தீப் சிங் பாவா (காங்கிரஸ்) - 34,608 வாக்குகள்
இரண்டாம் இடம் : கே.எல். தாக்கூர் (பாஜக) - 25,618 வாக்குகள்
வாக்கு வித்தியாசம்: 8990
கடந்த தேர்தலில் கே.எல். தாக்கூர் சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்றார். அவர் பாஜகவுக்கு சென்றதால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கே.எல். தாக்கூர் இரண்டாம்
இடத்துக்குத் தள்ளப்பட்டு அங்கு காங்கிரஸ் வென்றிருக்கிறது.


பிஹார்: ரூபாலி தொகுதியில் மட்டும் இடைத்தேர்தல் நடந்தது.

ரூபாலி தொகுதி:
வெற்றி : சங்கர் சிங் (சுயேச்சை) - 68,070 வாக்குகள்
இரண்டாம் இடம் : கலாதர் பிரசாத் மண்டல் (ஐக்கிய ஜனதா தளம் ) - 59,824 வாக்குகள்
வாக்கு வித்தியாசம்:8246
கடந்த முறை ஐக்கிய ஜனதா தளம் இந்தத் தொகுதியில் வென்றது. இம்முறை சுயேச்சை வேட்பாளரிடம் தொகுதியை இழந்துள்ளது. பெரிய கட்சிகள் களத்தில் இருந்தபோதிலும் சுயேச்சை வேட்பாளர் வென்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்: ஜலந்தர் மேற்கு தொகுதியில் மட்டும் இடைத்தேர்தல் நடந்தது.

ஜலந்தர் மேற்கு தொகுதி:
வெற்றி : மொஹிந்தர் பகத் (ஆம் ஆத்மி) - 55,246 வாக்குகள்
இரண்டாம் இடம் : ஷீடல் அங்கூரல் (பாஜக) - 17,921 வாக்குகள்
வாக்கு வித்தியாசம்:37,325
கடந்த 2022-ம் ஆண்டு ஆம் ஆத்மி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரான ஷீடல் அங்கூரல். பின், அவர் பாஜகவில் இணைந்தார்.அதன்பிறகு இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இம்முறை பாஜகவிலிருந்து போட்டியிட்ட ஷீடல் அங்கூரல் தோல்வியைத் தழுவியிருக்கிறார். ஆகவே, ஆம் ஆத்மி தங்கள் தொகுதியைத் தக்கவைத்துள்ளது.

உத்தராகண்ட்: பத்ரிநாத் மற்றும் மங்களூர் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

பத்ரிநாத் தொகுதி:
வெற்றி : லகாபத் சிங் புடோலா (காங்கிரஸ்) - 28,161 வாக்குகள்
இரண்டாம் இடம் : ராஜேந்திர சிங் பண்டாரி (பாஜக) - 22,937 வாக்குகள்
வாக்கு வித்தியாசம்: 5224
கடந்த 2022-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜேந்திர சிங் பண்டாரி காங்கிரஸ் சார்பாகக் களம் கண்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அதன்பின் 2024-ம் ஆண்டுதான் பாஜகவில் இணைந்தார். அதனால், இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இம்முறை பாஜக வேட்பாளராகக் களமிறங்கிய ராஜேந்திர சிங் பண்டாரி தோல்வியைத் தழுவியுள்ளார். காங்கிரஸ் கட்சி தொகுதியைத் தக்கவைத்துள்ளது.

மங்களூர் தொகுதி:
வெற்றி : முகமது நிஜாமுதீன் (காங்கிரஸ்) - 31,727 வாக்குகள்
இரண்டாம் இடம்: கர்தார் சிங் பதனா (பாஜக) -31,305 வாக்குகள்
வாக்கு வித்தியாசம்:422
கடந்த 2022-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். தற்போது நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வென்றுள்ளது.

மத்திய பிரதேசம்: அமர்வாரா தொகுதியில் மட்டும் இடைத்தேர்தல் நடந்தது.

அமர்வாரா தொகுதி:
வெற்றி : கமலேஷ் பிரதாப் ஷா (பாஜக) - 83,105 வாக்குகள்
இரண்டாம் இடம் : தீரன் ஷா இன்வதி (காங்கிரஸ்)- 80,078 வாக்குகள்
வாக்கு வித்தியாசம்:3027
2023-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட கமலேஷ் பிரதாப் ஷா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அவர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராகக் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே,கூட்டணியாகப் பார்க்கும்போது இண்டியா கூட்டணி கட்சிகள் சில மாநில இடைத்தேர்தலில் வென்று கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளதாகக் கருத்துகள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, காங்கிரஸ் ஓர் இடத்தை இழந்தும், 3 இடங்களைக் கூடுதலாகப் பெற்றும் ஒரு இடத்தைத் தக்கவைத்தும் உள்ளது. ஆம் ஆத்மி தன் ஓர் இடத்தைத் தக்கவைத்துள்ளது. திரிணமூல் 3 இடங்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. திமுக தன் ஓர் இடத்தைத் தக்கவைத்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை இரண்டு இடங்களில் புதிதாக வென்றும், 3 இடங்களை இழந்தும் இருக்கிறது பாஜக. கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஓர் இடத்தை இழந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தபோதிலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக மீதான அதிருப்தி தான் பின்னடைவுக்கு காரணம் என எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். தற்போது இடைத்தேர்தல் முடிவுகளும் பாஜகவுக்கு சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதை எதிர்க்கட்சியினர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸுக்கு எதிராக தங்கள் வெற்றியை மாநில கட்சிகளான திரிணமூல், ஆம் ஆத்மி பெற்றிருக்கிறது. அந்தத் தொகுதிகளில் காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE