உலக ஸ்கை டைவிங் நாள்: பாராசூட்டில் இருந்து குதித்த அமைச்சர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலக ஸ்கை டைவிங் தினத்தையொட்டி பாராசூட்டில் குதித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் சாதனை புரிந்துள்ளார்.

உலக ஸ்கை டைவிங் தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஹரியாணாவிலுள்ள நர்னவுல் விமானப்படை தளத்திலிருந்து விமானம் மூலம் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் புறப்பட்டார். விமானம், நடுவானில் சென்றதும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பாராசூட் மூலம் கீழே குதித்தார். அவர் பயிற்சியாளர் உதவியுடன் பத்திரமாக பாராசூட் மூலம் தரையிறங்கினார்.

பயிற்சியாளர் தனது உடலுடன் மத்திய அமைச்சர் ஷெகாவத்தை பெல்ட் மூலம் கட்டிக்கொண்டு குதித்துள்ளார். மேலும் மத்திய அமைச்சர் ஷெகாவத் பாராசூட்டில் இருந்துவானில் குதிக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. அதே விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்த மற்றொரு ஸ்கை டைவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார்.

தரையிறங்கியதும் 53 வயதான மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியதாவது: இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருந்தது. ஏரோஸ்போர்ட்ஸ் எனப்படும் வான் சாகச விளையாட்டுகள் மிகவும் உற்சாகம் நிறைந்தவை. இனி ஹரியாணாவின் நர்னவுல் விமானப் படைத் தளத்தில் இந்த சாகச நிகழ்ச்சிகளை சுற்றுலாப் பயணிகள் செய்யலாம். இவ்வாறு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE