தமிழகத்துக்கு காவிரி நீரை திறப்பது குறித்து முடிவெடுக்க கர்நாடகாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

By இரா.வினோத்


பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவது குறித்து முடிவெடுக்க கர்நாடகாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை அந்த மாநில முதல்வர் சித்தராமையா கூட்டியிருக்கிறார். இதில் ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி, தமிழகத்துக்கு 1 டிஎம்சி நீரை திறந்துவிடுவது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

டெல்லியில் கடந்த 11-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், “தமிழகத்துக்கு கர்நாடக அரசு 1 டிஎம்சி காவிரி நீரை ஜூலை 31-ம் தேதிக்குள் திறந்துவிட வேண்டும். தினமும் வினாடிக்கு 11,500 கன அடி நீர் பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் செல்வதை உறுதி செய்ய வேண்டும்” என பரிந்துரை செய்தது.

இதையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா அவசரமாக அமைச்சரவையை கூட்டி, தமிழகத் துக்கு நீரை திறந்துவிட முடியாது என தெரிவித்தார். மேலும் காவிரி ஒழுங்காற்று குழுவின் முடிவை எதிர்த்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடப் போவதாகவும் தெரிவித்தார்.

இதன் அடுத்தகட்டமாக, காவிரி நீரை திறந்துவிடுவது குறித்து முடிவெடுப்பதற்காக சித்தராமையா அம்மாநில அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் துணை முதல்வரும் நீர் பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், சமூக நலத்துறை அமைச்சர் ஹெச்.சி.மகாதேவப்பா, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ள‌னர்.

கட்சிகள், அமைப்புகள் பங்கேற்பு: இதுதவிர பாஜக, மஜத, கர்நாடக மாநில விவசாய சங்கம் மற்றும் கன்னட அமைப்பினர் கலந்துகொள்கின்றனர். கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியை சேர்ந்த எம்.பி., எம்எல்ஏக்களும் இதில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

திசை திருப்பும் முயற்சியா? கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது மனைவி பார்வதிக்கு மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் சார்பில் மாற்று நிலம் வழங்கிய விவகாரம் அம்மாநிலத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ள பாஜகவினர், தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனால் சித்தராமையாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை திசை திருப்பவே, சித்தராமையா காவிரி விவகாரத்தை கையில் எடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக குடகில் மழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு நீரை திறந்துவிடுவது சிக்கலாக இருக்காது. இருப்பினும் சித்தராமையா அதனை வைத்து, தன் மீதான குற்றச்சாட்டை திசை திருப்ப முயற்சிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE