பணி நியமனத்தின்போது தவறான தகவல்களை அளித்தாரா? - மோசடி செய்திருந்தால் பூஜா பணி நீக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்ட உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

ஓராண்டு பயிற்சி காலத்திலேயே, அவர் தனது சொந்த ஆடி காரில் சைரன் மற்றும் மகாராஷ்டிர அரசு என ஸ்டிக்கர் ஒட்டி சென்றுள்ளார். பயிற்சி அதிகாரிகளுக்கு இல்லாத வசதியை அவர் அலுவலகத்தில் கேட்டுள்ளார். இதுகுறித்து தலைமை செயலாளருக்கு, புனே ஆட்சியர் சுகாஸ் திவாசே புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் என்றும், தனக்கு பார்வை மற்றும் மன இறுக்க குறைபாடு உள்ளதாக தெரிவித்தும் மாற்றுத்தினாளிகளுக்கான பிரிவில் (பி.டபிள்யூ.பி.டி) இவர் வேலைக்கு சேர்ந்தது தெரியவந்துள்ளது.

ஆனால் அவரது தந்தை முன்னாள் அரசு உயர் அதிகாரி என்பதும், அவருக்கு 40 கோடியில் சொத்து இருப்பதும் தெரியவந்துள்ளது. பணி நியமனத்துக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய மருத்துவ பரிசோதனையில் இவர் ஆஜராகவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த, மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் கூடுதல் செயலாளர் மனோஜ் திவிவேதி தலைமையில் குழு ஒன்றை மத்தியஅரசு அமைத்துள்ளது. இந்த குழு பூஜா கேத்கர், எவ்வாறு பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஓபிசி சான்றிதழ் பெற்றார், பார்வை குறைபாடு மற்றம் மனகுறைபாடு சான்றிதழ் ஆகியவை உண்மையானதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்.

இதில் பூஜா தெரிவித்த விவரங்கள் பொய் என தெரியவந்தால் அவரை மகாராஷ்டிரா அரசு பணி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்படலாம் என்றும், அவர் மீது குற்ற வழக்கு தொடரப்படலாம் எனவும் மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சி துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE