‘113 இடங்கள் கிடைத்திருந்தால் மாநிலத்தை சொர்க்கமாக மாற்றி இருப்பேன்; பதவியைத் தான் இழக்கிறேன் வேறு எதையும் அல்ல’: உருக்கமான பேச்சுடன் முதல்வர் எடியூரப்பா விலகல்

By ஏஎன்ஐ

எனது உயிர் உள்ளவரைக் கர்நாடக மக்களுக்காக உழைப்பேன். பதவியைத் தான் இழந்திருக்கிறேன், மக்கள் எனக்கு 113 இடங்களை அளித்திருந்தால் நான் மாநிலத்தைச் சொர்க்கமாக மாற்றிஇருப்பேன் என்று உருக்கமாகப் பேசி தனது முதல்வர் பதவியை பி.எஸ்.எடியூரப்பா ராஜினாமா செய்தார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், 104 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும் கட்சியாக வந்த பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் பால் அழைத்து எடியூரப்பாவை முதல்வராக பதவிப் பிரமானம் செய்துவைத்தார்.

ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்குப் பெரும்பான்மை இருந்தும், ஆளுநர் தங்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

இந்நிலையில், எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்கவைத்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 19-ம் தேதிஇன்று மாலை 4 மணிக்குள் எடியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பைச் சட்டப்பேரவையில் நடத்த வேண்டும். இந்த வாக்கெடுப்பை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என உத்தரவிட்டது.

221 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க 111 எம்எல்ஏக்கள் தேவை. தற்போது பாஜகவிடம் 104 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தன. சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் 78 எம்எல்ஏக்கள், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் 36 எம்எல்ஏக்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு எம்எல்ஏ, பிறகட்சிகளின் 3 எம்எல்ஏ, பாஜக எம்எல்ஏக்கள் என அனைவரும் பதவிஏற்றுக்கொண்டனர். அதன்பின் சட்டப்பேரவைவை மாலை 3.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சட்டப்பேரவை மீண்டும் கூடியபோது, முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தில் பேசினார். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே உருக்கமாகப் பேசி தனது உரையின் முடிவில் ராஜினாமாவை அறிவித்தார். எடியூரப்பா பேசியதாவது:

கர்நாடக மக்களுக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தேர்தலில் எங்களுக்கு மக்கள் நல்ல தீர்ப்பளித்தார்கள். அதனால்தான் நாங்கள் 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். காங்கிரஸ் கட்சிக்கும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கும் மக்கள் அந்தத் தீர்ப்பை அளிக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியையும், ஜேடிஎஸ் கட்சியையும் மக்கள் ஆதரிக்கவில்லை, அவர்களை நிராகரித்துவிட்டனர். அதனால், தான் அவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை. தேர்தலுக்குப் பின் இரு கட்சிகளும் சேர்ந்து நேர்மையற்ற முறையில் கூட்டணி அமைத்துவிட்டனர்.

பாஜக 104 எம்எல்ஏக்கள் பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்ததால்தான் எங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சட்டப்படிதான் எங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார்.

காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் விவசாயிகள், வேளாண் தொழிலாளர்கள் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.

சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் ஆகியும், என் மாநில மக்களுக்கு நீர்ப்பாசனத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை, என் மக்களுக்குச் சுகாதாரமான குடிநீர் இல்லை. மாநிலத்தை இந்த நிலைக்குக் கொண்டுவந்த நிர்வாக முறை மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.

தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற வேளாண் கடனில் ரூ.ஒருலட்சம் வரை தள்ளுபடி செய்ய திட்டமிட்டு இருந்தேன். நீர்ப்பாசனத் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கத் திட்டமிட்டு இருந்தேன்.

விவசாயிகளை முன்னேற்றுவதுதான் எனது நோக்கமாகும். என் வாழ்க்கையை விவசாயிகளுக்காக அர்ப்பணித்துள்ளேன். என் கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் விவசாயிகளுக்காகவும், மாநில மக்களுக்காகவும் நான் உழைப்பேன்.

கடந்த 2 ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் நான் சுற்றுப் பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்தேன். அப்போது மக்களைச் சந்தித்த போது அவர்கள் ஏராளமான துன்பங்களைச் சந்தித்து வருவதை அவர்களின் முகத்தில் காண முடிந்தது. அதேசமயம், மக்கள் எனக்கு அளித்த வரவேற்பையும் அன்பையும் என்னால் மறக்க முடியாது.

எனக்கு மக்கள் தேர்தலில் 104 இடங்கள் அளித்ததற்குப் பதிலாக மக்கள் 113 இடங்களில் வெற்ற பெற வைத்து இருந்தால், இந்த மாநிலத்தை நான் சொர்க்கமாக மாற்றி இருப்பேன்.

நான் பதவியை இழக்கிறேன், வேறு எதையும் நான் இழக்கவில்லை. என்னுடைய வாழ்க்கை இந்த மாநில மக்களுக்கானது. இந்த மக்களுக்காக எனது உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 28 இடங்களிலும் பாஜக வெற்றி பெறும். நான் மக்களிடம் செல்கிறேன், அவர்களிடம் ஆதரவு கேட்கிறேன். நான் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்போவதில்லை. நான் ஆளுநர் மாளிகைக்கு சென்று எனது ராஜினாமா கடிதத்தை அளிக்கப்போகிறேன்

இவ்வாறு எடியூரப்பா உருக்கமாகப் பேசினார்.

இதைப்படிக்க மறந்துடாதீங்க....

நெட்டிசன் நோட்ஸ்: இரண்டு நாள் முதல்வர் - எடியூரப்பா

மேஜிக் நம்பர் 111’ -எடியூரப்பா ஆட்சி தப்பிக்க உதவும் 3 வழிகள் என்ன?

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல எத்தனை குறுக்கு வழிகள், தடைகள்’ - பாஜகவைச் சாடிய சிதம்பரம்

 

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்