புதுடெல்லி: நாடு முழுவதும் 7 மாநிலங்களின் 13 சட்டப்பேரவை தொகுதிளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகளின்படி, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி 10 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஓர் இடத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில், மேற்கு வங்கம், உத்தராகண்ட், பிஹாரின் சில இடங்களைத் தவிர அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் ஆணையத்தின் தகவல்படி தமிழகத்தின் விக்கிரவாண்டியில் அதிக அளவிலும், உத்தராகண்டின் பத்ரிநாத்தில் குறைந்த அளவிலும் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன.
2024 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடந்த இந்த முதல் இடைத்தேர்தல்களில் என்டிஏ-வுக்கும், இண்டியா கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவியது. இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், காலை முதலே பெரும்பாலான தொகுதிகளில் இண்டியா கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. இந்த நிலையில், இடைத்தேர்தல் நடந்த மொத்தம் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 10 இடங்களை இண்டியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. என்டிஏ 2 இடங்களில் வென்றுள்ளது. 13 தொகுதிகளின் வெற்றி விபரம்:
மேற்கு வங்கத்தை வென்ற திரிணமூல் காங்கிரஸ்: மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடந்த நான்கு தொகுதிகளிலும் மாநிலத்தின் ஆளும் கட்சியான மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அம்மாநிலத்தின் ராய்கஞ்ச் தொகுதியில் டிஎம்சி வேட்பாளார் கிருஷ்ண கல்யாணியும், ரானாகட் தக்ஷின் தொகுதியில் டிஎம்சி வேட்பாளர் முகுத் மணி அதிகாரி, பாக்தாவில் போட்டியிட்ட மதுபர்னா தாக்குர் மற்றும் மணிக்தலாவில் போட்டியிட்ட சுப்தி பாண்டே ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
» டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ராஜ்நாத் சிங் டிஸ்சார்ஜ்
» “எல்லையோர கிராமங்களின் வளர்ச்சியில் அரசு உறுதியுடன் செயல்படுகிறது” - அமித் ஷா
இமாச்சலில் காங்கிரஸ்- 2, பாஜக - 1: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தேக்ரா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மனைவியும், காங்கிரஸ் வேட்பாளருமான கமலேஷ் தாக்குர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை 9,399 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதேபோல் நலகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஹர்தீப் சிங் பாவா, பாஜக வேட்பாளர் கே.எல்.தாக்குரை 8,990 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். எனினும், இம்மாநிலத்தில் இடைத்தேர்தல் நடந்த மற்றொரு தொகுதியான ஹமிர்பூர் பாஜக வெற்றி பெற்றது. இங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட புஷ்பிந்தர் வர்மாவை பாஜக வேட்பாளாரான ஆஷிஷ் சர்மா 1,571 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
உத்தராகண்ட்டில் காங்கிரஸ் வெற்றி: உத்தராகண்டில் இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அங்குள்ள பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் லகாபத் சிங் புடோலா, பாஜக வேட்பாளர் ரஜேந்திர சிங் பண்டாரியை 5,224 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். மற்றொரு தொகுதியான மங்களூரில் காங்கிரஸ் வேட்பாளர் காசி முகம்மது நிஜாமுதீன், பாஜகவின் காதர் சிங் பதானாவை 422 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பஞ்சாப்பில் வாகை சூடிய ஆம் ஆத்மி: பஞ்சாப் மாநிலத்தின் மேற்கு ஜலந்தர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சியான ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மோகிந்தர் பாகத் இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சீத்தல் அங்குரலை 37,325 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
விக்கிரவாண்டியை தக்கவைத்த திமுக: தமிழகத்தின் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக அமோக வெற்றி பெற்று, அந்தத் தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளார் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார்.
மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடந்த அமர்வாரா தொகுதியை பாஜக வென்றுள்ளது. அங்கு பாஜக வேட்பாளர் கமலேஷ் பிரதாப் ஷா தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தீரன் ஷவை 3,027 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
சுயேட்சை வசமான பிஹார்: பிஹார் மாநிலத்தின் ருபாலி தொகுதியில் காலை முதல் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் முன்னிலை வகித்து வந்த நிலையில், தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங் இறுதி வெற்றியை தட்டிச் சென்றுள்ளார். அவர் ஜேடியு வேட்பாளர் கலதர் மண்டலை 8,246 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இழந்து கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் இண்டியா கூட்டணி பலம் பெற்றிருக்கும் பின்னணியில் இந்த இடைத்தேர்தல் பலப்பரீட்சை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago