ஜூன் 25 இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ - பிரதமர் மோடி கருத்தும், காங்கிரஸ் விமர்சனமும்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய அரசியலமைப்புச் சட்டம் காலில் போட்டு மிதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ நினைவுபடுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். அதேவேளையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ம் தேதி இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ ஆக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவரது அறிவிப்பை டேக் செய்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், "இந்திய அரசியலமைப்புச் சட்டம் காலில் போட்டு மிதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ நினைவுபடுத்தும். காங்கிரஸ் கட்டவிழ்த்துவிட்ட நெருக்கடி நிலை காரணமாக ஏற்பட்ட இந்திய வரலாற்றின் இருண்ட கட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாக இது இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், "ஜூன் 25, 1975 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தும் உணர்வற்ற செயலைச் செய்தார். அன்றைய சர்வாதிகார அரசு லட்சக்கணக்கான மக்களை பலவந்தமாக சிறையில் அடைத்து ஜனநாயகத்தை கொன்றது. அவசரநிலையை எதிர்த்துப் போராடிய மக்கள் அனைவரையும் நினைவுகூரும் வகையில், மோடி அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ம் தேதியை அரசியலமைப்பு படுகொலை தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளது. அவசரநிலை அளித்த சித்ரவதைகள் மற்றும் நெருக்கடிகள் எனும் இருண்ட அத்தியாயத்தைப் பற்றி வரும் தலைமுறையினர் அறிந்து கெள்ள இது உதவும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடியை நான் மனதார வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கடும் விமர்சனம்: காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மனிதர் மூலம் பிறப்பெடுக்காத பிரதமர் மேற்கொள்ளும் தலைப்புச் செய்திக்கான மற்றுமொரு பாசாங்குத்தனமான முயற்சியே இது. அறிவிக்கப்படாத 10 ஆண்டுகளாக அவசரநிலையை பிறப்பித்தவர் அவர். அதன் காரணமாகவே, இந்த தேர்தலில் மக்கள் அவருக்கு தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மிக தோல்வியை வழங்கினர். தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4, மோடி விடுதலை நாளாக வரலாற்றில் பதிவாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதன் கொள்கைகள், மதிப்புகள் மற்றும் நிறுவனங்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்திய பிரதமர் இவர். இந்திய அரசியல் சாசனம் மனுஸ்மிருதியிலிருந்து உத்வேகம் பெறவில்லை என்பதால் அதனை நிராகரிக்கிறோம் என கூறியவர்களின் கருத்தியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். மனிதர் மூலம் பிறப்பெடுக்காத பிரதமருக்கு, டெமாக்ரசி என்பது டெமோ-குர்சி மட்டுமே" என்று விமர்சித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "1975 முதல் 77 வரை அவசரநிலை காலம் இருந்தது. ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் பணயக் கைதிகளாகக் கைப்பற்றிய கொடூரத்தை செய்தது காங்கிரஸ். அந்தக் கொடுமைகளுக்கு லட்சக்கணக்கான ஜனநாயகப் போராளிகளுடன் நானும் ஒரு சாட்சியாக இருக்கிறேன். ஜூன் 25-ம் தேதியை ஜனநாயக படுகொலை தினமாக அனுசரிப்பது என்ற மோடி அரசின் முடிவு வரவேற்கத்தக்கது" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஜூன் 25, 1975 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சர்வாதிகார மனநிலையின் மோசமான வெளிப்பாடாக, நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். இதன்மூலம், அவர் நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார். எந்தத் தவறும் செய்யாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறை கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டனர். ஊடகங்களின் குரல் அடக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ஆம் தேதியை அரசியலமைப்பு படுகொலை தினம் ('சம்விதான் ஹத்யா திவாஸ்') ஆகக் கடைப்பிடிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாள் 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளை சகித்த அனைவரின் மகத்தான பங்களிப்பையும் நினைவுகூரும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்துள்ள இந்த முடிவு, அடக்குமுறை அரசாங்கத்தின் கைகளில் விவரிக்க முடியாத துன்புறுத்தலை எதிர்கொண்ட போதிலும், ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடிய லட்சக்கணக்கான மக்களின் ஆன்மாவுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அரசியலமைப்பு படுகொலை தினம் அனுசரிக்கப்படுவது, ஒவ்வொரு இந்தியரிடமும் தனிமனித சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும் உதவும். இதனால் காங்கிரஸ் போன்ற சர்வாதிகார சக்திகள், அந்த கொடூரங்களை மீண்டும் செய்வதைத் தடுக்கும்" என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்