நீதிபதிகளின் ஊதிய உயர்வு வழக்கில் தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநில தலைமை செயலர்களுக்கு சம்மன்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீதிபதிகளின் ஊதிய உயர்வு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களின் தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

நாடு முழுவதும் மாஜிஸ்திரேட், நீதிபதிகளின் ஊதியத்தை உயர்த்தஉச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்றநீதிபதி வெங்கடராம ரெட்டி தலைமையில் கடந்த 2017-ம் ஆண்டில்உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு மாஜிஸ்திரேட், நீதிபதிகளின் ஊதியத்தை 30 சதவீதம்உயர்த்த பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் கணக்கிட்டு ஊதிய உயர்வை அமல்படுத்த உத்தரவிட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் 30 சதவீதம் வழங்க வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு இலவச மருத்துவ வசதியை ஏற்படுத்த வேண்டும். ஓய்வூதியதாரர், குடும்பஓய்வூதியதாரர்களுக்கு உதவ சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:

நீதிபதிகளின் ஊதிய உயர்வு தொடர்பாக மாநில அரசுகளுக்கு 7 முறை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் பல்வேறு மாநிலங்கள் ஊதிய உயர்வை முறையாக அமல்படுத்தவில்லை.

எனவே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், டெல்லி, அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், இமாச்சல பிரதேசம், மேகாலயா, மத்திய பிரதேசம், மணிப்பூர், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் அரசுகள், நீதிபதிகளுக்கான ஊதியஉயர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை ஆகஸ்ட் 20-ம்தேதிக்குள் அமல்படுத்த வேண்டும்.

இந்த 16 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிதித் துறை செயலாளர்கள் ஆகஸ்ட் 23-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இதுதொடர்பான விரிவான பிரமாணபத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதிபதிகளின் ஊதிய உயர்வை முழுமையாக அமல்படுத்த மேற்குவங்க அரசு ஓராண்டு காலம் அவகாசம் கோரி மனு தாக்கல் செய்திருக்கிறது. இந்த மனுவை நிராகரிக்கிறோம். அசாமில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறி அந்த மாநில அரசும் அவகாசம் கோரியிருக்கிறது. இதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

நீதிபதிகளுக்கு ஊதிய உயர்வை வழங்க மத்திய அரசு அனுமதி வழங்க மறுக்கிறது என்று டெல்லி யூனியன் பிரதேச அரசு குற்றம் சாட்டி உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசும், டெல்லி யூனியன் பிரதேச அரசும் சமரச தீர்வை எட்ட வேண்டும்.

இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE