பதவியேற்கும் முன்பே பல வசதிகளை கேட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி: பூஜா மீதான புகார்கள் பற்றி விசாரிக்க குழு அமைப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்றவர் பூஜா கேத்கர், மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்ட உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை அவர் பயன்படுத்துவதாக சர்ச்சை எழுந்தது. பூஜா தனது சொந்த காரில் மகாராஷ்டிர அரசு என்றபலகையும் சிவப்பு-நீல சைரன் விளக்கும் பயன்படுத்தி வந்துள்ளார்.

கூடுதல் ஆட்சியர் அஜய் மோரே இல்லாதபோது அவரதுமுன் அறையை பூஜா ஆக்கிரமித்ததுடன் அவரது அனுமதியின்றி அங்கிருந்த பொருட்களை அகற்றியுள்ளார். வருவாய் உதவியாளரிடம் தனது பெயரில் லெட்டர் ஹெட், பெயர்ப் பலகை மற்றும் பிற வசதிகளை வழங்குமாறு கேட்டுள்ளார்.

பூஜாவின் தந்தை ஓய்வுபெற்ற அதிகாரி என்பதால் தனது மகளின்கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அதிகாரிகளுக்கு நெருக்குதல் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து மாநில தலைமைச் செயலாளருக்கு புனே மாவட்ட ஆட்சியர் சுகாஸ் திவேசா கடிதம் எழுதினார். இதையடுத்து பூஜா புனேயிலிருந்து வாஷிமுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் பணியில் சேருவதற்கு முன்பே பூஜா பல வசதிகளை கோரியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பான வாட்ஸ்- அப் உரையாடல்கொண்ட 3 ஸ்கிரீன்ஷாட் வெளியாகியுள்ளது.

பூஜா கேத்கர் ஓபிசி இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருந்தால்தான் (கிரீமிலேயர்) இந்த சலுகையை பெற முடியும்.

ஆனால், பூஜாவின் தந்தை தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பு ரூ.40 கோடி என்றும், ஆண்டு வருமானம் ரூ.43 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால், இவர் ஓபிசி பிரிவில் தேர்வு செய்யப்பட்டது செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதவிர, யுபிஎஸ்சி தேர்வின்போது கற்றல் குறைபாடு உள்ளிட்டபல்வேறு குறைபாடுகள் இருப்பதாகக் கூறி சிறப்புச் சலுகைகளை பெற்றுள்ளார். எனினும் இதுகுறித்த மருத்துவ சரிபார்ப்புக்கும் அவர் செல்லவில்லை. இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசு ஒருநபர் குழு அமைத்துள்ளது. இந்த குழு 2 வாரத்துக்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE