மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுப்போம்: ராகுல் காந்தி உறுதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தநாடாளுமன்றத்தில் இண்டியா கூட்டணி அழுத்தம் கொடுக்கும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மணிப்பூரில் கடந்தாண்டு மே மாதம் மைத்தேயி மற்றும் குகி இனத்தவர் இடையே வன்முறை ஏற்பட்டது. நீண்ட காலமாக நடைபெற்ற இந்த கலவரத்தில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். பலரது வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் மணிப்பூருக்கு கடந்த திங்கள்கிழமை சென்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அங்கு 3 வெவ்வேறு மாவட்ட முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து பேசினார். அவர்கள் தங்கள் நிலைமையை எடுத்துக்கூறி, தங்களுக்காக போராடும் படியும், தங்களின் குரலை நாடாளுமன்றத்தில் எழுப்பும்படியும் ராகுல் காந்தியிடம் கூறினர்.

பின்னர் அவர்களிடம் பேசியராகுல், “மணிப்பூர் விவகாரம்குறித்து நாங்கள் நாடாளுமன்றத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். உங்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புகிறேன். ஆனால், நீங்கள் எப்போது வீடு திரும்ப முடியும் என்பதை நான் கூற முடியாது. அதற்கு அரசுதான் பதில் அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில், உங்களின் பிரச்சினையை நான் எழுப்புவேன்” என்றார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி, “மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டது முதல் நான் அங்கு 3 முறை சென்றுள்ளேன். மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து இன்னமும் நிவாரண முகாம்களில் வசிக்கின்றனர்.

பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டு, அமைதிதிரும்ப வேண்டுகோள் விடுக்க வேண்டும். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் அவசியத்தை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி வலியுறுத்தும்” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE