மத்திய பட்ஜெட் 23-ம் தேதி தாக்கல்: பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், டெல்லியில் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

மக்களவை தேர்தல் காரணமாக, நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், நடப்பு நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் வரும் 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஜூலை 22-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டுக்கான முழுபட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 23-ம் தேதி தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் ஆகும்.

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் என்பதால், இது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தனிநபர் வருமான வரி தொடர்பாக புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை இலக்காக கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் அதற்கான திட்டங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்மலா சீதாராமன் ஆலோசனை: பட்ஜெட் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கெனவே, தொழில் துறை தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் என பல்வேறு தரப்பினருடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், டெல்லியில் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய திட்ட அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங், தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் மற்றும் பொருளாதார நிபுணர்கள் சுர்ஜித் பல்லா, அசோக் குலாத்தி, வங்கித் துறை நிபுணர் கே.வி.காமத் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்களுடன் நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெர்ரியும் கலந்துகொண்டார்.

சாமானிய மக்களின் நுகர்வை அதிகரிக்கும் வகையில் வரிச்சலுகை வழங்க வேண்டும் என்றும், பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்கும் வகையில் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE