நீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடு இல்லை; ஜூலை 3-வது வாரத்தில் கலந்தாய்வு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடக்கவில்லை. எனவே, மீண்டும் தேர்வு நடத்த அவசியம் இல்லை. இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் கலந்தாய்வு ஜூலை 3-வது வாரத்தில் தொடங்கி 4 சுற்றுகளாக நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துஉள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் என பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேர்வை ரத்து செய்ய கூடாது என்று குஜராத்தை சேர்ந்த 56 மாணவ, மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு இந்த மனுக்கள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விரிவான மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல, என்டிஏ, மத்திய கல்வித் துறை சார்பிலும் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களின் நகல்கள் மனுதாரர் களுக்கு கிடைக்கவில்லை என்று தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் நேற்று முறையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த நகல்களை அனைத்து மனுதாரர்களுக்கும் வழங்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மனுதாரர்கள் நலன் கருதி வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 18-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

மத்திய கல்வித் துறை தாக்கல் செய்துள்ள 44 பக்க மனுவில் கூறியிருப்பதாவது:

நீட் நுழைவு தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடக்கவில்லை. எனவே, மீண்டும் நீட் தேர்வை நடத்த அவசியம் இல்லை. இளநிலை மருத்துவ கலந்தாய்வு ஜூலை 3-வது வாரத்தில் தொடங்கி 4 சுற்றுகளாக நடத்தப்படும்.

கலந்தாய்வு நடக்கும்போதோ, அதற்கு பிறகோ, முறைகேடுகளில் பயனடைந்த மாணவர்கள் விண்ணப்பித்திருப்பது தெரியவந்தால் அந்த விண்ணப்பம் எந்த கட்டத்திலும் ரத்து செய்யப்படும்.

நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக சென்னை ஐஐடி சார்பில் அறிவியல்பூர்வமாக புள்ளிவிவரங்கள் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. நகரங்கள் அளவிலும், தேர்வு மையத்தின் அடிப்படையிலும் புள்ளிவிவரங்கள் அலசி ஆராயப்பட்டன. இதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவ, மாணவிகளின் பின்னணி குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அவர்கள் 18 மாநிலங்களை சேர்ந்தவர்கள். 56 நகரங்களில் 95 மையங்களில் தேர்வு எழுதியுள்ளனர். அவர்கள் எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை.

இந்த முறை நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் சுமார் 25 சதவீதம் வரை குறைக்கப்பட்டது. இதன் காரணமாகவே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர் என்று சென்னை ஐஐடி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

இவ்வாறு மத்திய கல்வித் துறையின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

என்டிஏ தாக்கல் செய்த மனுவில், ‘டெலிகிராம் செயலியில் மே 4-ம் தேதி நீட் வினாத்தாள் கசிந்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பரவுகின்றன. இது போலியானது. வினாத்தாள் முன்கூட்டியே கசியவில்லை. குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற புகைப்படங்கள் பரப்பப்பட்டு வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ தாக்கல் செய்த மனுவில், ‘பிஹாரின் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே நீட் வினாத்தாள் கசிந்து, சில மாணவர்களுக்கு மட்டுமே வினாத்தாள் கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் வினாத்தாள் கசியவில்லை. மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடக்கவில்லை’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமைச்சர் உத்தரவாதம்: இதற்கிடையே, நீட் தேர்வு தொடர்பாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை, மாணவர் பிரதிநிதிகள் டெல்லியில் நேற்று சந்தித்து பேசினர். அப்போது அவர், ‘‘தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் நீட் தேர்வு நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படும்’’ என்று உறுதி அளித்தார்.

நீட் முறைகேடுகள் தொடர்பாக பிஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 7 மாநிலங்களில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE