எம்எஸ்பி, கடன் தள்ளுபடி பிரச்சினை: மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (எம்எஸ்பி) சட்டபூர்வ உத்தரவாதம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM) தெரிவித்துள்ளது.

சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் பொதுக்குழுவின் பிரதிநிதிகள் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதில் பங்கேற்றவரும், அகில இந்திய விவசாயிகள் சபையின் தலைவருமான ஹன்னன் மொல்லா கூறியது: "நிலுவையில் உள்ள கோரிக்கைகளான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்த் கிசான் மோர்ச்சா மீண்டும் போராட உள்ளது. எங்களின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களிடம் மனுவாக வழங்க உள்ளோம். இதற்காக, ஜூலை 16 முதல் ஜூலை 18 வரை அவர்களைச் சந்திக்க அனுமதி கோரப்படும்.

2020-21-ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின்போது இறந்தவர்களுக்கு நினைவாக நினைவிடங்கள் டெல்லியின் திக்ரி மற்றும் சிங்கு எல்லையில் கட்டப்பட வேண்டும். அங்குதான், போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஓராண்டுக்கும் மேலாக முகாமிட்டனர். இந்த முறை நாடு தழுவிய போராட்டங்களை மேற்கொள்வதில் நாங்கள் கவனம் செலுத்த உள்ளோம்.

குறிப்பாக, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் எங்கள் போராட்டம் தீவிரமாக இருக்கும். டெல்லியை முற்றுகையிடும் நோக்கிலான போராட்டம் இந்த முறை இருக்காது. ஏனெனில், ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியான போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதில்லை. விவசாயிகளின் போராட்டம் காரணமாக சமீபத்திய மக்களவைத் தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் கிராமப்புறங்கள் ஆதிக்கம் செலுத்தும் 159 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக தோல்வியைச் சந்தித்தது.

ஆகஸ்ட் 9-ம் தேதி, சம்யுக்த் கிசான் மோர்ச்சா தனது கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தும். "வெள்ளையனே வெளியேறு" தினமான அன்று, "கார்ப்பரேட்களே இந்தியாவைவிட்டு வெளியேறு" என்பதை வலியுறுத்தும் நாளாக கடைப்பிடிக்க உள்ளோம். உலக வர்த்தக அமைப்பில் (WTO) இருந்து இந்தியா வெளியேற வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களை விவசாயத் துறையில் நுழைய அனுமதிக்கக் கூடாது." இவ்வாறு ஹன்னன் மொல்லா கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பில், விவசாயத் தலைவர்களான அவிக் சாஹா, பிரேம் சந்த் கெஹ்லாவத், பி கிருஷ்ணபிரசாத், டாக்டர் சுனிலம், யுத்வீர் சிங், ஆர். வெங்கையா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE