பட்ஜெட்டுக்கு முன் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

2024-25-க்கான மத்திய பட்ஜெட், ஜூலை 23-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட் மீது பரவலான எதிர்பார்ப்புகள் உள்ளன. 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான வரைபடத்தை இந்த பட்ஜெட் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கடந்த மாதம் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரையில், சீர்திருத்தங்களின் வேகத்தை விரைவுபடுத்துவதற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், அரசாங்கத்தின் தொலைநோக்கு கொள்கைகள் மற்றும் எதிர்கால பார்வைக்கு பயனுள்ள ஆவணமாக வரக்கூடிய பட்ஜெட் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், பட்ஜெட் குறித்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திட்ட அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், தலைமை பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன், பொருளாதார நிபுணர்கள் சுர்ஜித் பல்லா, அசோக் குலாட்டி, மூத்த வங்கியாளர் கே.வி.காமத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வரவிருக்கும் பட்ஜெட்டுக்கான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காகவே, பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார நிபுணர்களை சந்தித்ததாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE