உ.பி. காவல்நிலைய மேற்கூரையின் மீது ஏறிய காளையால் பரபரப்பு: வைரல் வீடியோ

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள காவல்நிலையம் ஒன்றின் மேற்கூரையின் மீது ஏறிய காளையால் சிலமணிநேரம் குழப்பமும் பீதியும் நிலவியது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் விரைவில் வைரலாகி வருகிறது.

ரேபரேலியில் உள்ள சலோன் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சுசி அவுட்போஸ்ட் காவல் நிலையத்தின் மேற்கூரையின் மீது ஒரு காளை இளைப்பாறுவது அந்த வீடியோவில் தெரிகிறது.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, காவல்நிலையத்தின் மேற்கூரையின் மீது காளைமாடு இருப்பதை காவலர்கள் முதலில் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கட்டிடத்தின் மேற்கூரையின் மீது காளை மாடு இருப்பதை வேடிக்கை பார்க்க கிராம மக்கள் காவல்நிலையத்தின் முன்பு ஒன்று திரண்டனர்.

இதனால் மாட்டை கூரையில் இறந்து கீழே இறக்கும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கினர். கட்டிடத்தில் இருந்து மாட்டை விரட்டும் முயற்சியில் கைகளில் கம்புகளுடன் போலீஸார் சென்றனர். அதனைப் பார்த்து பீதியடைந்த மாடு கூரையில் இருந்து கீழே குதித்து கீழே விழுந்தது. இதனால் காளை காயமடைந்தது. என்றாலும் அந்தக் காளை மாடு எப்படி காவல் நிலையத்தின் கூரை மீது ஏறியது என்று தெளிவாக தெரியவில்லை.

முன்னதாக, இந்தாண்டு ஜனவரி மாதம் உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ்வில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் உள்ளே காளை மாடு ஒன்று நுழைந்தது. வங்கிக்குள் திடீரென காளை வந்ததால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. பின்னர் அந்த காளையை காவலாளி ஒருவர் வெளியே விரட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் எதிர்வினையைத் தூண்டியது. ஒருவர், "யாருக்கும் சிறப்பு சலுகைகள் கிடையாது" என்று தெரிவித்திருந்தார். பலர் சிரிக்கும் இமோஜி போட்டிருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE