ரஷ்யா, ஆஸ்திரியா பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (வியாழக்கிழமை) காலை புதுடெல்லி வந்தடைந்தார்.

ஆஸ்திரியாவின் அரசு, அதிபர் மற்றும் மக்களின் அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எக்ஸ் தள பதிவில் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். “இந்தப் பயணம் வரலாற்று சிறப்புமிக்கது. நமது தேசங்களுக்கு இடையிலான நட்புறவு தழைத்துள்ளது. வியன்னாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டது மகிழ்ச்சி. சிறப்பாக உபசரித்த ஆஸ்திரிய அரசு, அதிபர் கார்ல் நெஹாம்மர், மற்றும் மக்களுக்கு நன்றி” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

வியன்னாவில் இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி பேசி இருந்தார். அதேபோல சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் ஆஸ்திரிய வருகையை சிறப்பாக திட்டமிட்டு, அதனை நல்ல முறையில் செயல்படுத்த வெளியுறவுத்துறை அமைச்சகம், காவலர்கள், ராணுவம் மற்றும் இந்தப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாம்மர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி உடனான சந்திப்பின் போது ஆஸ்திரியா - இந்தியா இடையிலான கலாசார பரிமாற்றம் குறித்து பேசி இருந்தார். யோகா, ஆயுர்வேதம் போன்றவற்றில் தங்கள் மக்களின் ஆர்வம் பெருகி உள்ளதாக கார்ல் நெஹாம்மர் தெரிவித்தார். தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசி இருந்தனர்.

தொடர்ந்து ஆஸ்திரியாவின் அலெக்ஸாண்டர் வான் டெர் பெல்லன் மற்றும் இருநாட்டு வணிகர்களையும் சந்தித்து பிரதமர் மோடி பேசி இருந்தார். இதற்கு முன்னதாக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்று இருந்தார். அங்கு யுத்தம் குறித்தும், யுத்த களத்தில் உள்ள இந்தியர்கள் குறித்தும் பிரதமர் மோடி பேசி இருந்தார். இந்தச் சூழலில் இரண்டு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அவர், இன்று காலை நாடு திரும்பினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE