திருப்பதியில் பொது இடத்தில் சிகரெட் புகைக்க தடை

By என்.மகேஷ்குமார்


திருப்பதி: புண்ணிய வைணவ திருத்தலமாக விளங்கும் திருப்பதி நகரில் கோவிந்தராஜர், கோதண்டராமர், கபிலேஸ்வரர், பத்மாவதி தாயார் ஆகிய புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன. மேலும், திருமலைக்கு செல்லும் பக்தர்கள் திருப்பதி வழியாகத்தான் திருமலைக்கு செல்ல வேண்டியுள்ளது.

இதனால், ஏற்கனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க திருப்பதி மற்றும் திருமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கவோ, பயன்படுத்தவோ முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் கூட திருமலையில் தடை செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், திருமலைக்கு குட்கா, சிகரெட், பீடி, பான் மசாலா, மதுபான பாட்டில்கள், மாமிசம் போன்றவையும், துப்பாக்கி, கத்தி போன்றவ ஆயுதங்களும் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக தற்போது திருப்பதி நகரில் பொது இடங்களில் சிகரெட், பீடி போன்றவை புகைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி அருகே 100 மீட்டருக்குள் உள்ளகடைகளில் பீடி, சிகரெட், பான்மசாலா, குட்கா போன்றவை விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி போலீஸ் எஸ்.பி. ஹர்ஷவர்தன் நேற்று உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து திருப்பதி, திருச்சானூர், ரேணிகுண்டா ஆகிய பகுதிகளில் போலீஸார் ஆய்வு நடத்தி நிபந்தனையை மீறி பீடி, சிகரெட் விற்கும் கடைகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE