7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்: என்டிஏ - இண்டியா கூட்டணி மீண்டும் மோதல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கும் இடையே மீண்டுமொரு பலப்பரீட்சை இன்றுநடைபெறுகிறது. தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அவ்விரு கூட்டணிகளும் போட்டியிட்டு தங்களது பலத்தை நிரூபிப்பதற்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. இதற்கு எந்த கூட்டணிக்கு அதிக பலன் கிடைத்து என்பது ஜூலை 13-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது தெளிவாக தெரிந்துவிடும்.

மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்சின் (எஸ்சி), பாக்தா (எஸ்சி), மணிக்தலா ஆகியநான்கு சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலை சந்திக் கின்றன.

அதேபோன்று, பிஹாரில் ரூபாலி, பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு,இமாச்சல பிரதேசத்தில் டேஹ்ரா,ஹமிர்பூர், நலகார்க், உத்தராகண்டில் பத்ரிநாத், மங்களூரு, மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

வேட்பாளர் மரணம் அல்லது பதவியை ராஜினாமா செய்தது போன்ற காரணங்களால் ஏற்பட்ட காலியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெறுகிற நான்கு தொகுதிகளில் 3 தொகுதிகளை கடந்த 2021 தேர்தலில் பாஜக கைப்பற்றியிருந்தது.

பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. பெரும்பான்மையான கங்கோடா சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களை இவ்விரு கட்சிகளும் நிறுத்தியுள்ளன.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மங்களூரில், காங்கிரஸ் கட்சி காசி நிஜாமுதீனை நிறுத்தியுள்ளது, அவர் மூன்று முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். உத்தராகண்ட் உருவாக்கப்பட்டதில் இருந்து மங்களூர் தொகுதியில் பாஜக இதுவரை வெற்றி பெற்றதில்லை. அக்கட்சி கர்தார் சிங் பதானாவை களமிறக்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE