மும்பையை உலுக்கிய சொகுசு கார் விபத்து: ஷிண்டே கட்சி பிரமுகரின் மகன் கைது - நடந்தது என்ன?

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பையின் வோர்லி பகுதியில் ஜூலை 7-ம் தேதி அதிகாலையில் அதிவேகமாக சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் கணவர் படுகாயமடைந்தார். குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படும் மிஹிர் ஷா என்ற இளைஞர் 72 மணி நேரத்துக்கு பின் கைது செய்யப்பட்டார். புனே போர்ஷே கார் விபத்து போல மும்பை நகரிலும் கார் விபத்து நிகழ்ந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

என்ன நடந்தது? - மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியை சேர்ந்த ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7ம் தேதி) இரவு 11 மணி அளவில் தனது தந்தைக்கு சொந்தமான பென்ஸ் காரில் அருகில் உள்ள மதுபான விடுதிக்கு பார்ட்டிக்கு சென்றார். பின்னர் நள்ளிரவு 1 மணி அளவில் வீடு திரும்பிய மிஹிர் ஷா மறுநாள் அதிகாலை 4 மணி அளவில் மதுபோதையில் தனது டிரைவர் ராஜ்ரிஷி பிதாவத்தை அழைத்துக் கொண்டு மும்பை மரைன்ட்ரைவ் பகுதியில் ட்ரைவ் சென்றார்.

இந்த முறை பிஎம்டபிள்யூ காரில் சென்ற மிஹிர் ஷா அதிகாலை 5 மணி அளவில் மீண்டும் வீடு திரும்பினார். வீடு திரும்பும் வழியில் மும்பை வோர்லி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி மீது மிஹிர் ஷா ஒட்டிச் சென்ற பிஎம்டபிள்யூ கார் அதிவேகத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த இருசக்கர வாகனத்தை ஒட்டிச் சென்ற பிரதீப் அங்கேயே கீழே விழுந்துவிட்டார். ஆனால், அவரின் மனைவி காவேரி நக்வா (45) மிஹிர் ஷாவின் பிஎம்டபிள்யூ காரில் சிக்கிக்கொள்ள கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டார்.

ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் தாண்டி, காரை நிறுத்திய மிஹிர் ஷா காரில் சிக்கியிருந்த காவேரி நக்வாவை வெளியே கொண்டுவந்துள்ளார். பின்னர் காரை டிரைவர் ராஜ்ரிஷி பிதாவத்திடம் இயக்க கொடுத்துவிட்டு மிஹிர் ஷா எதிர் சீட்டில் அமர்ந்துகொண்டுள்ளார். அப்போது அங்கிருந்து கிளம்பும்போது ரிவர்ஸ் கியரில் இருந்து கார் மீண்டும் ஒருமுறை காவேரி நக்வா மீது மோதியது. இதில் காவேரி நக்வா சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்தை மூடி மறைத்த தந்தை: மிஹிர் ஷாவின் தந்தை தற்போது மகாராஷ்ட்ராவில் ஆளும் கட்சியாக இருக்கும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியை சேர்ந்த ராஜேஷ் ஷா. வோர்லி விபத்துக்கு பின் சில கிலோ மீட்டர் தள்ளி கலா நகர் பகுதியில் இருந்து டிரைவர் ராஜ்ரிஷி பிதாவத் போனில் இருந்து தனது தந்தை ராஜேஷ் ஷாவுக்கு போன் செய்துள்ளார் மிஹிர் ஷா. தந்தையிடம் விபத்தை விவரித்து கூறிய நிலையில், அதனை கேட்டு கலா நகர் பகுதிக்கு தனது பென்ஸ் காரில் விரைந்து வந்த ராஜேஷ் ஷா, மகன் மிஹிர் ஷாவை அங்கிருந்து உடனடியாக தப்பிக்க வைத்துள்ளார்.

ஆட்டோ ஒன்றில் மகனை ஏற்றி அனுப்பிய ராஜேஷ் ஷா, பின்னர் டிரைவர் ராஜ்ரிஷி பிதாவத் மூலம் விபத்தை ஏற்படுத்திய பிஎம்டபிள்யூ காரை கொண்டுச் சென்றுள்ளார். அப்போது போலீஸ் அவர்களை வழிமறித்து கைது செய்தது. இதில் ராஜேஷ் ஷா 24 மணிநேரத்தில் ரூ.15 ஆயிரம் பிணைத் தொகை செலுத்தி ஜாமினில் வெளியே வந்தார். எனினும், டிரைவர் ராஜ்ரிஷி பிதாவத் மட்டும் இப்போது சிறையில் உள்ளார்.

விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது மிஹிர் ஷா விபத்தை ஏற்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைக்க, அதனை நீதிமன்றத்தில் ஒப்படைத்து அவரை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டினர். எனினும், கடந்த 3 நாட்களாக மிஹிர் ஷாவை கண்டுபிடிக்க முடியவில்லை. 11 தனிப்படைகளை அமைத்து மும்பை போலீஸார் தேடிவந்த நிலையில், தனது தாய், சகோதரியுடன் மிஹிர் ஷா தலைமறைவாக இருந்துவந்தார்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்துவந்த மிஹிர் ஷாவை செவ்வாய்க்கிழமை பிற்பகல் போலீஸார் கைது செய்தனர். அவரை நீதின்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு அழைத்துச் செல்ல உள்ளனர். புனே கார் விபத்து சம்பவத்தை நினைவுகொள்ளும் விதமாக இந்த மும்பை கார் விபத்து நடந்தேறியிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE