ஆஸ்திரியா உருவாவதில் நேருவின் பங்கை ‘நேருபோபியா’ உடையவர்கள் நினைவு கூரவேண்டும்: காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐம்பதுகளின் துவக்கத்தில் இறையாண்மை மற்றும் நிடுநிலையான ஆஸ்திரியா உருவாக காரணமான இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பங்களிப்பை நேரு வெறுப்பு (நேருஃபோபியா) உள்ள பிரதமர் நரேந்திர மோடி போன்றவர்கள் நினைவுகூர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பிரதமர் மோடியின் ஆஸ்திரிய பயணத்துக்கு முன்பாக, இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் இன்று ஆஸ்திரியாவில் உள்ளார். ஆஸ்திரியா குடியரசு கடந்த 1955-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி முழுமையாக நிறுவப்பட்டது. அது அந்நாட்டின் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. இது நிஜமாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வேறு யாருமில்லை பிரதமர் மோடி வெறுக்கவும் அவதூறு செய்யவும் விரும்புகிறவர்.

புகழ்பெற்ற ஆஸ்திரிய கல்வியாளரான டாக்டர் ஹான்ஸ் கோச்லர், இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற வல்லரசுகளின் ஒரு தசாப்த ஆக்கிரமிப்புகளுக்கு பின்னர், ஐம்பதுகளின் தொடக்கத்தில் இறையாண்மை மிக்க நடுநிலையான ஆஸ்திரியா உருவாவதற்கு முக்கிய பங்காற்றியவர் ஜவஹர்லால் நேரு. உலக அளவில் நேருவின் மிகத் தீவிரமான ஆதரவாளராக இருந்த டாக்டர் பிருனோ கிரைஸ்கி, 1970 - 83 வரை ஆஸ்திரியாவின் அதிபராக இருந்தார்.

கடந்த 1989-ல் கிரைஸ்கி நேரு பற்றி நினைவு கூரும் போது, "இந்த நூற்றாண்டின் வரலாறு எழுதப்படும் போது, முத்திரை பதித்தவர்களின் அத்தியாயங்களை எழுதும் போது, பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் வரலாறு அதில் சிறந்த ஒன்றாக இருக்கும். அது நவீன இந்திய வரலாறின் ஒரு பகுதியாக இருக்கும். எனது ஆரம்ப கால வழிகாட்டிகளில் நேருவும் ஒருவராக இருந்தார்.

இதனை நமது பிரதமர் மற்றும் குறிப்பாக 2019ம் ஆண்டு முதலிருக்கும் நமது புலமைமிக்க துணிச்சலான வெளியுறவுத் துறை அமைச்சர் போன்ற நேருபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நினைவு கூர்வது நல்லது. இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், டாக்டர் கோச்லரின் கட்டுரைப்பதிவுக்கான இணைப்பையும் பகிர்ந்துள்ளார்.

ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி தனது பயணத்தை முடித்துக்கொண்டு ஜூலை 9-ம் தேதி ஆஸ்திரியா செல்கிறார். கடந்த 40 ஆண்டுகளுக்கு பின்னர், அங்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடியே.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE