“உங்கள் சகோதரனாக வந்துள்ளேன்” - மணிப்பூர் மக்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

By செய்திப்பிரிவு

இம்பாலா: “நான் மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. இங்கே இப்போது தேவை அமைதி மட்டுமே. வன்முறை அனைவரையும் பாதித்துள்ளது. மணிப்பூர் மக்களிடம் நான் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். நான் இங்கே உங்கள் சகோதரனாக வந்துள்ளேன்” என்று மணிப்பூரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அங்கிருந்து விமானம் மூலம் மணிப்பூர் தலைநகர் இம்பாலா சென்றடைந்தார்.

பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக சுராசந்த்பூர் சென்ற அவர் அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “மணிப்பூரில் பிரச்சினை தொடங்கிய பிறகு நான் இங்கு வருவது இது மூன்றாவது முறை. இது ஒரு மிகப்பெரிய துயரம். மணிப்பூர் சூழலில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லாதது ஏமாற்றம் தருகிறது.

நாங்கள் மணிப்பூர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உரையாடினோம். எங்களால் முடிந்த உதவியை செய்ய விரும்புகிறோம் என்றும் அவரிடம் தெரிவித்தோம். எங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, இங்கு நிலவும் சூழல் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றும் அவரிடம் கூறினோம்.

நான் இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. இங்கே இப்போது தேவை அமைதி மட்டுமே. வன்முறை அனைவரையும் பாதித்துள்ளது. மணிப்பூர் மக்களிடம் நான் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். நான் இங்கே உங்கள் சகோதரனாக வந்துள்ளேன். உங்களுக்கு உதவி செய்யும் ஒருவனாக வந்துள்ளேன். மணிப்பூரில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட விரும்புபவனாக வந்துள்ளேன்.

இங்கு அமைதியை மீண்டும் கொண்டு வர தேவையான அனைத்தையும் காங்கிரஸ் உங்களுக்கு செய்ய தயாராக உள்ளது. நான் எத்தனை முறை இங்கே வரவேண்டும் என்று நீங்கள் விரும்பினாலும் நான் இங்கே மகிழ்ச்சியுடன் வந்து உங்களோடு பேச விரும்புகிறேன்.

இந்திய ஒன்றியத்தின் பெருமை மிகு மாநிலம் மணிப்பூர். இங்கே எந்த பிரச்சினையும் இல்லையென்றாலும் கூட பிரதமர் இங்கே வந்திருக்க வேண்டும். இந்த மிகப் பெரிய துயரத்தின் நடுவே பிரதமர் ஓரிரு நாள் இங்கே வந்து இந்த மக்களின் குறைகளை காதுகொடுத்து கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE