புதுடெல்லி: இளநிலை நீட் தேர்வு நேர்மையாக நடக்கவில்லை என்று கொந்தளிப்புடன் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இளநிலை நீட் (NEET-UG 2024) தேர்வு கடந்த மே 5-ம் தேதி நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான மையங்களில் நடைபெற்றது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதிக்கு 10 நாட்கள் முன்னதாக ஜூன் 4 அன்று வெளியிடப்பட்டது. இதில், 67 மாணவர்கள் முதலிடம் பெற்றிருந்தனர். இவர்களில், 10-க்கும் மேற்பட்டோர் முழு மதிப்பெண்களை பெற்றிருந்தனர். இவர்களில் பலர் ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் என்பது தெரிய வந்தது. இதோடு, விணாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட புகார்களும் எழுந்தன.
எனவே, இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரி மாணவர்களில் பலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். தேர்வை வெற்றிகரமாக எழுதிய குஜராத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கும் தேசிய தேர்வு முகமைக்கும் தடை விதிக்கக் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தனர். இவ்வாறு பெறப்பட்ட 38 மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, "நீட் தேர்வில் மோசடி செய்தவர்களை முழுமையாக கண்டறிய முடியாது. அவர்களை தனியாக பிரிக்க முடியாது. தேர்வின்போது கடைப்பிடிக்க வேண்டிய முறையான வழிகாட்டு நெறிகளை தேசிய தேர்வு முகமை பின்பற்றத் தவறிவிட்டதாக பிஹார் காவல் துறை ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, மறு தேர்வுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மறு தேர்வு கோரும் மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
» கனமழையால் தத்தளிக்கும் மும்பை: மக்கள் வெளியே வரவேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் அறிவுரை
» ஜார்க்கண்ட் | நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி
இதற்கு பதில் அளித்த தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “மோசடி திட்டமிட்ட முறையில் நடந்ததா அல்லது தனிப்பட்ட முறையில் நடந்ததா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. மறு தேர்வு நடத்துவது என்பது நேர்மையாக தேர்வெழுதியவர்களை தண்டிப்பதாக ஆகிவிடும். தேர்வில் முதல் 100 இடங்களைப் பிடித்த மாணவர்கள், 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 56 நகரங்களைச் சேர்ந்தவர்கள். இது ஓர் உள்ளூர் முறைகேடு” என்று தெரிவித்தார்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "இது 23 லட்சம் மாணவர்களின் வாழ்க்கையை உள்ளடக்கியது. சமூக ஊடகங்கள் அல்லது மின்னணு தகவல் தொடர்பு வழிமுறைகள் மூலம், கசிவு பரவலாக இருக்கும். அது காட்டுத்தீ போல் பரவியிருக்கும். இந்த தேர்வு நேர்மையாக நடைபெறவில்லை. இது தொடர்பாக தனது விசாரணை அறிக்கையை சிபிஐ அடுத்த விசாரணை தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல், முறைகேடு நடந்த மையங்கள் எவை எவை என்பதை தேசிய தேர்வு முகமை அடையாளம் காண வேண்டும்.
நீட் தேர்வின் புனிதத்தன்மையை உறுதி செய்வதில் நீதிமன்றம் அக்கறை கொண்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்கக் கூடாது. இதற்காக, புகழ்பெற்ற நிபுணர்களைக் கொண்ட பல்துறைக் குழுவை அமைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிப்பது அவசியமாகும். ஏற்கெனவே குழு அமைக்கப்பட்டிருந்தால், அதுகுறித்த முழு விவரங்களையும் அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். குழுவைத் தொடர அனுமதிக்க வேண்டுமா அல்லது அமைப்பை மாற்ற வேண்டுமா என்பதை நீதிமன்றம் பின்னர் பரிசீலிக்கும். இளநிலை நீட் தேர்வை ரத்து செய்வது கடைசி முயற்சியாகவே இருக்கும்” என்று கூறினார்.
மேலும், மறு தேர்வு கோரும் மனுதாரர்கள் அனைவரும் சேர்ந்து ஒருங்கிணைந்த கோரிக்கையை 10 பக்கங்களுக்கு மிகாமல் மனுவாக தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago