அசாம் வெள்ளம் | 28 மாவட்டங்களில் 23 லட்சம் மக்கள் பாதிப்பு; நிவாரண முகாமுக்குச் சென்று ராகுல் ஆறுதல்

By செய்திப்பிரிவு

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 28 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 23 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று அசாம் மாநிலம் ஃபுலர்டலில் உள்ள நிவாரண முகாமை பார்வையிட்டார். தொடர்ந்து அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அசாமில் கனமழை பெய்து வருகிறது. பிரம்மபுத்திரா, பராக் நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 35 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன.

இன்று (ஜூலை 8) அசாம் மாநில அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ தகவலின்படி, "அசாமின் வெள்ள நிலைமை மோசமாக இருந்துவருகிறது. 28 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 23 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து அபாயக் கட்டத்துக்கு மேல் உள்ளது.

இந்த ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல் ஆகியவற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெள்ளத்தில் சிக்கி மட்டும் 66 பேர் உயிரிழந்தனர்.” என்று கூறப்பட்டுள்ளது.

28 மாவட்டங்களில் உள்ள 3,446 கிராமங்களில் கிட்டத்தட்ட 23 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் 68,432.75 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. துப்ரி மாவட்டத்தில் 7,54,791 பேர், கச்சார் மாவட்டத்தில் 1,77,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 269 நிவாரண முகாம்களில் மொத்தம் 53,689 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

நிமதிகாட், தேஜ்பூர் மற்றும் துப்ரி ஆகிய இடங்களில் பாயும் பிரம்மபுத்திரா நதி அபாய கட்டத்தை தாண்டி பாய்ந்து கொண்டிருந்தது. மாநிலத்தின் மற்ற ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

நிவாரண முகாம்களை பார்வையிட்ட அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, "வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள அனைத்து நிவாரண முகாம்களிலும் நிலைமை சீராகும் வரை போதுமான அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரண முகாம்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரமே அரசின் முன்னுரிமை" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று அசாம் மாநிலம் ஃபுலர்டலில் உள்ள நிவாரண முகாமை பார்வையிட்டார். தொடர்ந்து அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி. சில்சார் விமான நிலையத்துக்கு வந்த அவர் அங்கிருந்து சச்சார் லக்கிபூர் சென்றார். தலாய் பகுதியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமில் மக்களை சந்தித்தார்.

காங்கிரஸ் விமர்சனம்: ராகுல் காந்தி அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்கள் சென்றுள்ளதை குறிப்பிட்டு பிரதமர் மோடி மீது காங்கிரஸ் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், “ராகுல் காந்தி அசாம் மற்றும் மணிப்பூருக்கு செல்லும் போது, ​​பிரதமர் மோடி ரஷ்யா செல்கிறார். 14 மாதங்களுக்கு முன்பு மணிப்பூரில் வன்முறை வெடித்தது. அதன்பிறகு ராகுல் காந்தி மூன்றாவது முறையாக மணிப்பூர் செல்கிறார். ஆனால், சில மணிநேரங்கள் கூட பிரதமருக்கு மணிப்பூருக்குச் செல்ல நேரம் கிடைக்கவில்லை. அல்லது விருப்பமில்லை.இத்தனைக்கும் பாஜக தான் அங்கு ஆள்கிறது. பாஜக ஆளும் மாநிலத்தின் முதல்வரை கூட பிரதமர் சந்திக்கவில்லை.” என்று விமர்சித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE