சென்னை உட்பட 4 இடங்களில் உச்ச நீதிமன்றக் கிளைகள் அமைக்க திமுக எம்.பி. வில்சன் கோரிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சென்னை உட்பட 4 இடங்களில் உச்ச நீதிமன்றக் கிளைகளை அமைக்க மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலிடம், திமுக எம்பி பி.வில்சன் நேரில் வலியுறுத்தியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய அமர்வுகளை நிறுவுதல்: இது தொடர்பாக அர்ஜூன் ராம் மேக்வாலை சந்தித்த பி. வில்சன், உச்ச நீதிமன்றக் கிளைகளை அமைப்பது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது: டெல்லியில் உள்ள அரசியல் சாசன அமர்வினைத் தவிர்த்து, தெற்கு, வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்காக சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய அமர்வுகளை நிறுவ வேண்டும்.

நீதிக்கான அணுகல் என்கிற கோட்பாடு நமது அரசியலமைப்புச் சட்டத்தில் அழிக்க முடியாதபடி பொறிக்கப்பட்டுள்ளது. கடைமட்ட அளவில் நீதிக்கான அணுகல் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இந்திய உச்ச நீதிமன்றமானது இந்த பரந்த தேசத்தின் அனைத்து திசைகளிலும் உள்ள ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை சமூகங்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாகவும், கிடைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காவிட்டாலும், தற்போதைய நடைமுறையில் பிரிவு 32 இப்போது உண்மையில் யாருக்கு கிடைக்கிறது என்றால், புவியியல் ரீதியாக உச்ச நீதிமன்றத்திற்கு அருகில் வசிக்கக்கூடிய குடிமக்கள், வழக்கு மற்றும் பயணச் செலவுகள் ஒரு பொருட்டல்ல என்று கருதும் நிதி வசதி படைத்த வகுப்பினர். பொருளாதார காரணிகள் காரணமாக பிரிவு 32 இன் கீழ் உதவி மறுக்கப்பட முடியாது, அத்தகைய நிலைமை பிரிவு 39 இன் கீழ் அரசியலமைப்பு ஆணைக்கு முரணானது.

அந்த வகையில் உச்ச நீதிமன்றமானது புது தில்லியில் அமைந்துள்ளது. இது நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அணுகல் நிறைந்ததாக இல்லை. பல மாநிலங்களிலிருந்து, குறிப்பாக தெற்கு, தென்மேற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.

இந்த மாநிலங்களில் உள்ள குடிமக்கள் தொலைவு காரணமாக மட்டுமல்லாமல், செலவுக் காரணிகள் காரணமாகவும் நீதிமன்றத்தை அணுகுவதற்கான அடிப்படை உரிமையை இழக்கிறார்கள். பிரிவு 32 ரிட் மனுக்களைத் தவிர, உரிமையியல் மற்றும் குற்றவியல் மேல்முறையீடுகள், சிறப்பு மேல் முறையீட்டு மனுக்கள் (SLPs), அரசாங்கங்களுக்கு இடையிலான தகராறுகள் மற்றும் சர்வதேச வணிக நடுவர் விஷயங்கள் தொடர்பான மனுக்கள் ஆகியவற்றை நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கிறது. நீதிமன்றத்தின் எப்போதும் விரிவடைந்து வரும் இந்த தன்மையானது, அரசியலமைப்பு விஷயங்களை விசாரிக்கும் ஒரு அமைப்பிலிருந்து இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாக மாற்றியுள்ளது.

இந்த நிலைமைக்கு தீர்வு காண, நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் 2004, 2005, 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத்தின் பிராந்திய அமர்வுகளை அமைக்க பரிந்துரைத்தன. 16.3.2021 அன்று இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட பணியாளர், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 107வது அறிக்கை, உச்சநீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய அமர்வுகளை ("PRB") நிறுவவும் பரிந்துரைத்துள்ளது.

பல்வேறு சட்ட ஆணைய அறிக்கைகளும் பிராந்திய அமர்வுகளை நிறுவ பரிந்துரைத்துள்ளன. சட்ட ஆணையம் தனது 229வது அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தை டெல்லியில் அரசியல் சாசன அமர்வாகவும், டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நான்கு மண்டலங்களில் மாற்று அமர்வுகளாகவும் பிரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், நிரந்தர பிராந்திய அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விரிவாக விவாதித்தது.

மாநிலங்களவைக்குள் இந்தப் பிரச்சினையை நான் பலமுறை எழுப்பியுள்ளேன். தங்களின் முன்னோடிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளேன். மேலும், நிரந்தர பிராந்திய அமர்வுகளை நிறுவுவதற்கு வகை செய்யும் வகையில் அரசியலமைப்பின் 130 வது பிரிவில் திருத்தம் செய்வதற்கான தனி நபர் மசோதாவையும் 26.07.2021 அன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

நிரந்தர பிராந்திய அமர்வுகளை நிறுவுவதன் மூலம், நீதிக்கான அதிக அணுகலை உருவாக்குவதன் மூலம் நீதித்துறை நிறுவனங்களை வலுப்படுத்துவோம் மாறாக பலவீனப்படுத்த மாட்டோம். இதனால், நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டு, வழக்குகள் விரைந்து முடிக்கப்படுவதுடன், தேங்கிக் கிடக்கும் நிலுவைகளை விரைவாக தீர்க்க இயலும். அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே, எந்த கோணத்தில் பார்த்தாலும், நிரந்தர பிராந்திய அமர்வுகளை நிறுவுவது காலத்தின் தேவையாகும்.

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி மற்றும் சமூக பன்முகத்தன்மையை உறுதி செய்தல்: 27.06.2023 அன்றைய நிலவரப்படி சுமார் 83,665 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. நமது உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் "செயல்திறன் பற்றாக்குறை" தவிர, "பன்முகத்தன்மை பற்றாக்குறையும் உள்ளது. நீதித்துறையின் பன்முகத்தன்மை என்பது, தீர்ப்பின் தரத்திற்கு அடிப்படையானது.

நீதித்துறையில் பல சமூகக் குழுக்களின் பிரதிநிதித்துவம் மோசமான அளவில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த மிகவும் குறுகிய, ஒரே மாதிரியான நீதிபதிகள் குழு மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்தின் கருத்துக்களையும் மதிப்புகளையும் பிரதிபலிக்க முடியாது. குறிப்பாக பன்முக, மொழி, கலாச்சார மற்றும் தலைமுறை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் பிரதிபலிக்க முடியாது என்று மக்கள் அஞ்சுகிறார்கள். ஏனென்றால், நீதிபதிகள் தங்கள் சொந்த பின்னணியின் அடிப்படையில் சட்டத்தை விளக்கி அமல்படுத்துவார்கள் என்பதால் அவர்களுக்கு வேறுபட்ட கண்ணோட்டம் தேவைப்படும்.

நான் உறுப்பினராக உள்ள பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவானது, "நீதித்துறை செயல்முறைகள் மற்றும் அவற்றின் சீர்திருத்தம்" குறித்த அதன் 133 வது அறிக்கையில், நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினைகளை எழுப்பியுள்ளது.

மேலும், உயர் நீதித்துறைக்கான நியமனங்களுக்கான பரிந்துரைகளை செய்யும் போது, ​​உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் கொலீஜியம் ஆகிய இரண்டும், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் உட்பட சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் போதுமான எண்ணிக்கையில் பரிந்துரைக்க வேண்டும் என்று கமிட்டி தன் பரிந்துரைகளை வழங்கியது. தற்போது இறுதி செய்யப்பட்டு வரும் நடைமுறை குறிப்பாணையில் இந்த விதி தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

மேலும், தற்போது உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் அனைத்து நீதிபதிகள் தொடர்பாகவும் இதுபோன்ற தரவுகளை சேகரிப்பதற்கான வழிவகைகளைக் கண்டறியவும், இதற்காக நீதிபதிகளின் சட்டங்கள் / பணி விதிகளில் தேவையான திருத்தங்களைக் கொண்டு வரவும் பரிந்துரைத்துள்ளது.

பல்வேறு மாநிலங்களையும் வெவ்வேறு சமூகங்களையும் போதுமான அளவு பிரதிநிதித்துவப்படுத்தும் மிகவும் மாறுபட்ட நீதித்துறை விரும்பத்தக்கது. ஏனெனில், அப்படி ஒன்று இல்லாமல், பிரதிநிதித்துவம் இல்லாத வகுப்புகளை மீறுவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் அதிகரிக்கின்றன.

இது மறைமுகமாக பாகுபாட்டைக் குறிக்கிறது. அமர்வுகளில் உள்ள பன்முகத்தன்மை நீதித்துறையில் பக்கச்சார்பற்ற தன்மையை மேம்படுத்துவதோடு, நீதி நிர்வாகத்தில் பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.

மேலும், இந்திய சமூகமானது பல்வேறு மதங்கள், சமூகங்கள், சாதிகள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களின் கலவையைக் கொண்டிருப்பதால், சமூகத்தில் வளர்ந்து வரும் பன்முகத்தன்மையை நிவர்த்தி செய்ய நீதித்துறையில் பன்முகத்தன்மை தேவைப்படுகிறது. நன்கு செயல்படக்கூடிய நீதித்துறைக்கு பக்கச்சார்பற்ற தன்மை அவசியம் என்பது உண்மை.

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துதல்: நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதே வழக்குகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நீதிபதிகள் ஓய்வு பெறும்போது, அவர்களின் இடங்களில் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படுவது உடனடியாக செய்யப்படுவதில்லை என்ற உண்மையின் காரணமாக இந்த நிலைமை மேலும் மோசமடைகிறது. நீதிபதிகள் நியமனத்திற்கான நடைமுறைக் குறிப்பாணையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் தேதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக காலியிடங்களை நிரப்புவதற்கான செயல்முறை தொடங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

இதனால் ஒரு நீதிபதி ஓய்வு பெற்றவுடன் காலியிடம் உடனடியாக நிரப்பப்படும். 01.06.2024 அன்றைய நிலவரப்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 11 நீதிபதி காலியிடங்கள் உட்பட அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் 345 க்கும் மேற்பட்ட நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலைமையை சீர்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளில் ஒன்று, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 65 ஆக உயர்த்துவதும், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65-லிருந்து 70 ஆக உயர்த்துவதும் ஆகும். அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டபோது, பிரிவு 217 (1) உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 60 ஆக நிர்ணயித்தது. அதைத் தொடர்ந்து, 13 ஆண்டுகளுக்குள், 60 வயதில் மனித உடலும் மனமும் செயலிழந்து விடுவதில்லை என்பது உணரப்பட்டது. எனவே, 1963 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (பதினைந்தாவது திருத்தம்) சட்டத்தின் மூலம், ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டது. 1963 முதல், ஓய்வு பெறும் வயது 62 ஆக இருந்தது. கடந்த ஐந்து தசாப்தங்களில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவம், சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் முன்னேற்றமானது மற்ற துறைகளில் உள்ள இந்தியர்களை திறமையாகவும், செயல்பாட்டுடனும், சுமார் 75 வயது வரை நன்றாக வேலை செய்ய அனுமதித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஏற்கனவே இந்த விஷயத்தில் நம்மை விட முன்னணியில் உள்ளன என்பதை கவனிக்க வேண்டும். மிகவும் வளர்ந்த ஜனநாயக நாடுகளில் 70 வயதில் ஓய்வு பெறுவது ஒரு பொதுவான நடைமுறையாகும். உதாரணமாக, ஆஸ்திரியா, கிரீஸ் மற்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் மற்றும் அரசியலமைப்பு நீதிமன்றங்களில், நீதிபதிகள் அவர்களின் ஓய்வு பெறும் வயதினை தேர்வுசெய்ய விருப்பம் உள்ளது. இதேபோல், பெல்ஜியம், டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து, நார்வே மற்றும் ஆஸ்திரேலியாவில், நீதிபதிகளின் ஓய்வு வயது 70 ஆக உள்ளது.

உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் முன்கூட்டிய ஓய்வு வயது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு வெளிப்படையான அச்சுறுத்தலாக உள்ளது. இயற்கையாகவே, ஓய்வு பெறும் வயதை நெருங்கும்போது, நீதிபதிகள் ஓய்வுக்குப் பிந்தைய வேலைகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்குகிறார்கள். இது தீர்ப்பாயங்கள், ஆணையங்கள் அல்லது அரசாங்கத்தின் சட்டமன்றங்கள் அல்லது நிர்வாக பிரிவுகளின் அரசியல் பதவிகளுக்கு நியமனங்களைப் பெறுவதற்கான நம்பிக்கையில் அரசாங்க சார்பு அணுகுமுறையை எடுக்க வழிவகுக்கிறது. முற்றிலும் மனித கண்ணோட்டத்தில் பார்த்தால், இதற்காக அவர்களை குறை சொல்ல முடியாது. ஏனென்றால் சில நீதிபதிகள் இன்னும் 62 வயதில் வாழ்க்கைக்காக சம்பாதிக்க வேண்டியுள்ளது என்பதே உண்மை. அவர்களுக்கு ஆதரவளிக்க குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர்கள் இருக்கலாம் மற்றும் வழங்கப்படும் ஓய்வூதியம் நகர்ப்புறங்களில் உயிர்வாழ போதுமானதாக இல்லை. ஒவ்வொரு நீதிபதியும் 10-15 ஆண்டுகள் நீதிபதியாக இருந்தவிட்டு மீண்டும் வழக்காடுபவர்களாக மாற முடியாது.

பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு 2018 ஆம் ஆண்டு தனது 96 வது அறிக்கையில், நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதை ஆதரித்தது. இது தற்போதுள்ள நீதிபதிகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், நீதித்துறை காலியிடங்களையும் நிலுவையில் உள்ள வழக்குகளையும் குறைக்கவும் உதவும் என்று கூறியது. மேலும், 16.3.2021 அன்று இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட பணியாளர், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 107வது அறிக்கையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 62-லிருந்து 65 ஆக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை முறையே 65 மற்றும் 70 ஆக உயர்த்தவும் அவர்கள் தொடர்ந்து பரிந்துரை செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யக்கோரி, தனி நபர் மசோதாவாக அரசியலமைப்பு திருத்த மசோதாவை 06.12.2019 அன்று மாநிலங்களவையில் நான் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

கொலீஜியம் பரிந்துரைத்த நிறுத்தி வைக்கப்பட்ட பெயர்களை நீக்குதல்: உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்த பிறகு அவர்களின் பெயர்களை பரிசீலிக்க எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதற்குப் பதிலாக, பல்வேறு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்ட சில பெயர்களை எந்தவித நியாயமும் இல்லாமல் சட்ட அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது அல்லது பொருட்படுத்தவில்லை. உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்களை ஒன்றிய அரசின் சட்ட அமைச்சகமானது புறக்கணித்ததன் விளைவாக, தகுதியான பலர் தங்கள் ஆர்வத்தையும் மன உறுதியையும் இழந்துவிட்டனர். மேலும் கொலீஜியத்தின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் நிச்சயமற்ற தன்மை இருப்பதால் பலர் இப்போது அத்தகைய உன்னதமான பதவிகளை ஏற்க ஆர்வம் காட்டுவதில்லை.

"இரண்டாவது நீதிபதிகள் வழக்கில்" வகுக்கப்பட்டுள்ள சட்டத்தின் அடிப்படையில், கொலீஜியத்தின் பரிந்துரைகள் ஒன்றிய அரசின் சட்ட அமைச்சகத்தை கட்டுப்படுத்துகின்றன என்ற உண்மையை நான் வலியுறுத்த விரும்புகிறேன். எனவே, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு மாநில அரசு, ஒன்றிய அரசு, உளவுத்துறை ஆகியவற்றின் ஆலோசனைகள் மற்றும் உள்ளீடுகளுக்குப் பிறகு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை புறக்கணிப்பது அல்லது பொருட்படுத்தாமல் இருப்பது தன்னிச்சையான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் உயர் நீதித்துறை நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதில் அங்கீகரிக்கப்பட்ட முறையை மீறுவதாகும். குறிப்பாக கொலீஜியம் இரண்டு முறை வலியுறுத்தியுள்ள நிலையில், இந்த பரிந்துரைகள் மீது சட்ட அமைச்சகம் முடிவெடுக்காமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை.

அரசியலமைப்பு நடைமுறையில், இந்த முட்டுக்கட்டையை ஒருபோதும் மன்னிக்கவோ பாராட்டவோ முடியாது. ஏனெனில் யாரும் சட்டத்தின் ஆட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. நாம் அனைவரும் அதற்கு கட்டுப்பட்டவர்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகள் ஒன்றும் புதிதல்ல, பொது அரங்கில் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டு பேசபொருளாக உள்ளவையே. இந்திய நீதித்துறையில் இத்தகைய சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதன் மூலம், அமைப்பில் கசிவுகளை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்திய குடிமக்களுக்கு விரைவான நீதியை வழங்கும் நன்கு செயல்படக்கூடிய இயந்திரமாக இருப்பதை உறுதி செய்ய முடியும்.

எனவே, டெல்லியில் உள்ள அரசியல் சாசன அமர்வினைத் தவிர்த்து, தெற்கு, வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்காக சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களில் உச்சநீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய அமர்வுகளைத் தோற்றுவிக்கவும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி மற்றும் சமூக பன்முகத்தன்மையை உறுதி செய்யவும். அரசியலமைப்பு திருத்தங்களின் மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 65-ஆகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65-லிருந்து 70-ஆகவும் உயர்த்தவும். பல்வேறு உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிப்பதற்காக உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டு, நிறுத்திவைக்கப்பட்ட / பொருட்படுத்தாமல் விடப்பட்ட பெயர்களை தெரிவிக்கவும் மற்றும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தபடி அவர்களை பணிமூப்பு நிலையில் வைக்கவும். இந்த கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE