உ.பி. ஆன்மிக கூட்ட நெரிசல் பலி 116 ஆக அதிகரிப்பு; பெண்கள், குழந்தைகள் அதிகம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராரா-வில் நாராயண் சாகர் விஷ்வ ஹரி போலே பாபா என்பவரின் பிரார்த்தனை கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் பக்தர்கள் வெளியேறும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது.

சிக்கந்தராராவின் முகல்கடி எனும் கிராமம், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ளது. இங்கு நாராயண் சாகர் விஷ்வ ஹரி போலே பாபா எனும் துறவியின் மடம் அமைந்துள்ளது. இதில் செவ்வாய்க்கிழமை அனைத்து மதத்தினரின் மனிதநேய மங்கள சந்திப்பு எனும் பெயரில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில், ஹாத்தரஸை சுற்றியுள்ள மாவட்டங்களின் கிராமவாசிகள் ஆயிரக்கணக்கில் வந்து கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் முடிந்து பக்தர்கள் வெளியேறியபோது நெரிசல் ஏற்பட்டது. தள்ளு முள்ளு காரணமாக ஒருவர் மீது ஒருவர் விழத் துவங்கியுள்ளனர். இதனால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு வெளியேறும் வழி தெரியாமல் பலரும் மயங்கி விழுந்துள்ளனர்.

மயங்கிய பலர் அதே இடத்தில் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இவர்களில் 27 பேரின் உடல்கள் அருகிலுள்ள ஏட்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நெரிசலில் படுகாயம் அடைந்த பலரும் அருகிலுள்ள ஹாத்தரஸ், அலிகர் மற்றும் ஏட்டா அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த அரசு மருத்துவமனைகளின் பிணவறைகள் நிறைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பலர் ஆங்காங்கே உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிலும் பலர் உயிரிழந்தனர். இது குறித்து ஆக்ரா மண்டல காவல் துறை ஏடிஜியின் மக்கள்தொடர்பு அலுவலகம் சார்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 116 என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 1.25 லட்சம் பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெரிசல் ஏற்பட்டது எப்படி? - செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஹாத்தரஸ் கூட்டத்தில் பாதுகாப்பு போலீஸார் அதிகம் இருக்கவில்லை. காலை 9 மணிக்கு துவங்கியக் கூட்டம் சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றுள்ளது. தற்போது உத்தரப் பிரதேசத்தின் கோடை வெப்பத்தில் வந்த மழையின் காரணமாக ஈரப்பதம் அதிகமாக இருந்துள்ளது. இச்சூழலில், கூட்டத்தினர் வெளியேற போதுமான வாசல் வசதி செய்யப்படவில்லை. இதில், ஒருவர் தடுக்கி விழ அவர் மீது அடுத்தடுத்து பலரும் விழுந்துள்ளனர். இது தெரியாமல் ஏற்பட்ட நெரிசல் அதிகரித்து பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஆன்மிகக் கூட்ட அமைப்பாளர்கள் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன. இதன் மீதும் நடைபெறும் விசாரணையில் விரைவில் கைதுகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாசிக்க > அன்று காவலர், இன்று ஆன்மிக குரு... - லட்சக்கணக்கான பக்தர்கள் கொண்ட ‘போலே பாபா’ யார்?

முன்னதாக, ஹாத்தரஸ் நிர்வாகம் மற்றும் காவல் துறையினருடன் அருகிலுள்ள ஏட்டா மாவட்டத்தின் காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார்சிங் மற்றும் ஏட்டா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியான உமேஷ் சந்திர திரிபாதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சம்பவ இடம் போர்க்களம் போல் எங்கு பார்த்தாலும் பலியானவர்கள் உடல்களும், காயப்பட்டவர்களும் மயங்கி கிடந்தனர். இவர்கள் உள்ளூர் கிராமவாசிகள் உதவியுடன் கிடைத்த வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மிகவும் பரிதாபமான இந்த நெரிசல் பலி சம்பவத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஹாத்தரஸ் மாவட்டத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் சோகமானது; இதயத்தைத் துன்புறுத்துகிறது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் லக்‌ஷமி நாராயண் சவுத்ரி மற்றும் சந்தீப் சிங் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்லுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டதாகவும், அதேபோல், மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநரும் அங்கு விரைய உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்