ஜனநாயகத்தின் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டு மக்களுக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் இன்று (ஜூன் 30) பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நான் மனதின் குரல் மூலமாக மீண்டும் ஒருமுறை உங்களிடையே, என் குடும்பத்தாரிடையே வந்திருக்கிறேன். ஒரு மிகவும் இனிமையான பயன்பாடு உண்டு – இதி விதா புனர்மிலனாய என்பார்கள். இதன் பொருளும் கூட மிகவும் இனிமையானது, நான் விடை பெறுகிறேன், மீண்டும் சந்திப்போம் என்பதாகும் அது. இந்த உணர்வோடு தான் நான், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கிறேன் என்று பிப்ரவரி மாதம் உங்களிடம் கூறியிருந்தேன்,

இன்று மனதின் குரலோடு உங்களிடையே மீண்டும் வந்திருக்கிறேன். நீங்கள் அனைவரும் நலமாய் இருப்பீர்கள், உங்கள் வீடுகளில் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். இப்போது பருவமழைக்காலமும் வந்து விட்டது, பருவமழைக்காலம் வரும் போது, மனமும் குதூகலத்தில் துள்ளுகிறது. இன்று மீண்டும் ஒருமுறை நாம் மனதின் குரலில், தங்களுடைய செயல்பாடுகளால் தேசத்தில் மாற்றமேற்படுத்திய நாட்டுமக்களைப் பற்றி விவாதிக்க இருக்கிறோம். மேலும் நாம் நமது வளமான கலாச்சாரம், கவுரவமான வரலாறு, வளர்ச்சியை நோக்கிய பாரதத்தின் முயற்சிகளைப் பற்றி விவாதிக்க இருக்கிறோம்.

பிப்ரவரி தொடங்கி இப்போது வரை, எப்போதெல்லாம் மாதத்தின் கடைசி ஞாயிறு வருகிறதோ, அப்போதெல்லாம் உங்களுடன் உரையாட முடியவில்லையே என்ற உணர்வு என்னை அழுத்தியது. ஆனால் கடந்த மாதங்களில் நீங்கள் எல்லாம் எனக்கு இலட்சக்கணக்கான செய்திகளை அனுப்பியிருக்கிறீர்கள் என்பதைக் காணும் போது, என் மனதிற்கு மிகவும் உவப்பாக இருக்கிறது. மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி, சில மாதங்களுக்கு என்னமோ தடைப்பட்டிருக்கலாம். ஆனால், மனதின் குரலில் ஏற்படுத்திய உணர்வினால், தேசத்தில், சமூகத்தில், ஒவ்வொரு நாளும் நல்ல பணிகள், சுயநலமற்ற உணர்வோடு புரியப்படும் பணிகள், சமூகத்தில் நல்ல ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. தேர்தல் காலத்துச் செய்திகளுக்கு இடையே கண்டிப்பாக மனதைத் தொடக்கூடிய செயல்கள்-செய்திகள் மீது உங்கள் கவனம் செலுத்தப்பட்டிருக்கும்.

நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைவருக்கும் இந்த காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.

இன்று ஜூன் மாதம் 30ம் தேதி மிகவும் மகத்துவம் வாய்ந்ததாகும். இந்த நாளைத் தான் நமது பழங்குடியின சகோதர சகோதரிகள், 'ஹூல் தினம்' என்ற வகையிலே கொண்டாடுகிறார்கள். இந்த நாள், வீரர்களான சித்தோ-கான்ஹூவின் அசாத்தியமான சாகசத்தோடு தொடர்புடையது. இவர்கள் அந்நிய ஆட்சியாளர்களின் கொடுமைகளை வலிமையாக எதிர்த்தார்கள். வீரர்கள் சித்தோ-கான்ஹூ, ஆயிரக்கணக்கான சந்தாலி சகாக்களை ஒன்றிணைத்து, ஆங்கிலேயர்களுக்கு எதிரான தீவிரமான போராட்டத்தை மேற்கொண்டார்கள்.

இது எப்போது என்று உங்களுக்குத் தெரியுமா? இது 1855ஆம் ஆண்டு நடந்தது. அதாவது 1857 நாட்டின் முதல் சுதந்திரப் போருக்கு ஈராண்டுகள் முன்னமேயே நடந்தது. அப்போது ஜார்க்கண்டின் சந்தால் பர்கனாவிலே, நம்முடைய பழங்குடி சகோதர சகோதரிகள், அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராக, ஆயுதமேந்திய போராட்டத்தைத் துவக்கினார்கள். நம்முடைய சந்தாலி பழங்குடியின சகோதர சகோதரிகளின் மீது ஆங்கிலேயர்கள் பலவகையான கொடுமைகளைப் புரிந்தார்கள். அவர்கள் மீது பலவிதமான கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தார்கள். இந்தப் போராட்டத்தில் அற்புதமான வீரத்தை வெளிப்படுத்திய வீரர்களான சித்தோவும் கான்ஹூவும் பலிதானிகளாகினார்கள். ஜார்க்கண்டின் இந்த அமரகாதை படைத்த சத்புத்திரர்களின் பலிதானம், இன்றும் கூட, நாட்டுமக்களுக்கு உத்வேகமளித்து வருகின்றது" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

29 mins ago

வணிகம்

40 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

56 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

உலகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்